புணர்ச்சிகளையும் அதன் தன்மை நிலைகளையும் அறிந்து கொள்ளல்-05

கீழே கொடுக்கப்படும் வினாவுக்கான விடையை சுருக்கமாக விவரித்தல்-05

1.ண், ன் ஈற்றின் முன் வேற்றுமையில் வன்கணம் வந்தால் எவ்வாறு புணர்ச்சி நிகழும்? 

நிலை மொழி ஈற்றில் ண், ன் வர வருமொழி முதலில் வேற்றுமையில் வன்கணம் (வல்லினம்) வந்தால் முறையே ண், ட் டாகவும்; ன், ற் ராகவும் புணரும். 

உ +ம்:   மண் + குடம் = மட்குடம் 

               பொன் + தகடு = பொற்றகடு

 

2.ண், ன் ஈற்றின் முன் வேற்றுமையில் மென்கணமும், இடைக் கணமும் வந்தால் எவ்வாறு புணர்ச்சி நிகழும்? 

நிலை மொழி ஈற்றில் ண், ன் வர வருமொழி முதலில் வேற்றுமையில் மென்கணமும், இடைக்கணமும் வந்தால் இயல்பாகப் புணரும். 

உ+ம்:     மண் + மாட்சி = மண்மாட்சி 

                மண் + வாத்து = மண்வாத்து

 

3.ன், ல் ஈற்றின் முன் த் வரின் எவ்வாறு புணர்ச்சி நிகழும்? 

நிலை மொழி ஈற்றில் ன், ல் வர வருமொழி முதலில் ‘த்’ வரின் அவ் ‘த்’  ஆனது ‘ற்” றாகிப் புணரும். 

உ +ம்:    பொன் + தட்டு = பொன்றட்டு 

                கல் + தீது = கற்றீது

 

4.நிலைமொழி ஈற்றில் ‘ள்’ வர வருமொழி முதலில் த வரின் எவ்வாறு புணர்ச்சி நிகழும்? 

நிலை மொழி ஈற்றில் “ள்’ வர வருமொழி முதலில் ‘த’ வரின் ள் + த = ட என ஆகிப் புணரும். 

உ+ம்:   தாள் + தலை = தாடலை 

             மக்கள் + தமை = மக்கடமை

 

5.ல்,ள் ஈற்றின் முன் வல்லினம் வரின் எவ்வாறு புணர்ச்சி நிகழும்? 

நிலை மொழி ஈற்றில் ‘ல்’, ‘ள்’ என்பன வர வருமொழி முதலில் வல்லினம் வந்தால் ‘ல்’எனும் மெய்யானது ‘ற்’ ஆகவும், ‘ள்’ எனும் மெய்யானது “ட் ‘ஆகவும் திரிபடைந்து புணர்ச்சி நிகழும். 

உ+ம்:  கல் + குகை = கற்குகை 

             பால் + குடம் = பாற்குடம் 

            முள் + செடி = முட்செடி 

             வாள் + படை = வாட்படை

 

6.ல், ள் ஈற்றின் முன் மெல்லினம் வரின் எவ்வாறு புணர்ச்சி நிகழும்? 

நிலை மொழி ஈற்றில் ‘ல்”,’ள் ‘ என்பன வர வருமொழி முதலில் மெல்லினம் வந்தால் ‘ல்’ எனும் மெய் ‘ன்’ ஆகவும், ‘ள்’ எனும் மெய் “ண்’ ஆகவும் திரிபடைந்து புணர்ச்சி நிகழும். 

உ +ம் :    கல் + மாட்சி = கன்மாட்சி 

                 கல் + மனம் = கன்மனம் 

                 முள் + நீண்டது = முண்நீண்டது 

                 முள் + மாட்சி = முண்மாட்சி

 

(ல்,ன் ஈற்றின் முன் இடையினம் வரின் இயல்பாகிப் புணரும்) 

 

7. ’ழ்’ஈற்றின் முன் வல்லினம் வரின் எவ்வாறு புணர்ச்சி நிகழும்?

நிலை மொழி ஈற்றில் ‘ழ் ‘வர வருமொழி முதலில் வல்லினம் வந்தால் வரும் வல்லினம் மூன்று மாற்றங்களை அடையும். 

 1) இயல்பாகும்.

     உ+ம்: யாழ் + பெரிது - யாழ் பெரிது 

 

 2) வல்லினம் மிகும்.

     உ+ம்: தமிழ் + தேன் - தமிழ்த்தேன் 

 

 3) மெல்லினம் மிகும்.

      உ+ம்: பாழ் + கிணறு = பாழ்ங்கிணறு 



8. ய், ர் ஈற்றின் முன் வல்லினம் வரின் எவ்வாறு புணர்ச்சி நிகழும்? 

நிலை மொழி ஈற்றில் ‘ய்”, ‘ர் ‘வர வருமொழி முதலில் வல்லினம் வந்தால் வரும் வல்லினம் மூன்று மாற்றங்களை அடையும். 

1) இயல்பாகும்.

    உ+ம்:    வேய் + குறிது = வேய்குறிது

                    வேர் + சிறிது = வேர்சிறிது 

 

2) வல்லினம் மிகும்.

   உ+ம் :  நாய் + கடி = நாய்க்கடி

                 தேர் + கால் = தேர்க்கால் 

 

3)மெல்லினம் மிகும்.

   உ+ம்:     வேய் + குழல் = வேய்ங்குழல்

                   ஆர் + கோடு = ஆர்ங்கோடு

 

9. ம் ஈற்றின் முன் நாற்கணமும் வரின் எவ்வாறு புணர்ச்சி நிகழும்? 

நிலை மொழி ஈற்றில் ‘ம்’ வர வருமொழி முதலில் வல்லினம், மெல்லினம், இடையினம், உயிர் எனும் நாற்கணமும் வந்தால் பின்வரும் இரு முறைகளில் புணரும்.

1)  இறுதியிலுள்ள ‘ம் ‘கெட்டு விதி ஈறாயுள்ள உயிருடன் சேர்ந்து வல்லினம் வரின் மிகுந்தும், மெல்லினம், இடையினம் வரின் இயல்பாயும் உயிர் வரின் உடம்படுமெய் தோன்றவும் புணரும்.

   உ+ம்:   மரம் + பொந்து = மரப்பொந்து 

             ( ம் கெட மர + பொந்து ஆகி உயிரீற்றின் முன் வல்லினம் புணரும் புணர்ச்சியாகி இயல்பாக வல்லினம் மிகுந்து வரப் புணர்ந்துள்ளது)

 

   உ+ம்:  மரம் + நடுவம் = மரநடுவம் 

              ( ம் கெட மர + நடுவம் ஆகி உயிரீற்றின் முன் மெல்லினம் புணரும் புணர்ச்சியில் இயல்பாகப் புணர்ந்துள்ளது) 

 

   உ+ம்:  மரம் + வேர் = மரவேர் 

             (ம் கெட மர + வேர் என உயிரீற்றின் முன் இடையினம் புணரும் புணர்ச்சியில் இயல்பாகப் புணர்ந்துள்ளது.) 

 

   உ+ம்:   மரம் + அடி = மரவடி 

               ( ம் கெட மர + அடி என உயிரீற்றின் முன் உயிர் புணர்ந்து வ கர உடம்படு மெய் தோன்றியுள்ளது.) 

 

2)  வல்லினம் வருமொழியாய் வர நிலைமொழி மகரம் கெடாது அவ்வல்லினத்தின் இனமாகத் திரிந்தும் புணரும். 

    உ+ம்:   நிலம் + தீ  = நிலந்தீ

                 நம் + கை = நங்கை 

                 மரம் + செடி = மரஞ்செடி

 

மேலும் பாடங்கள்