சொற்றொடர்களையும் வாக்கிய உறுப்புக்களையும் அறிதல்.-02

கேள்விக்கான விடைகளைச் சரியாக விளக்கி அறிதல்.

1. செயப்படுபொருள் என்றால் என்ன? 

வினையின் பயனையுறுவது செயப்படுபொருள் எனப்படும். 

உ+ம்:கண்ணன் பாடம் படித்தான்.

இங்கே படித்தான் எனும் வினையின் பயனையுறும் சொல் பாடம் என அமையும். எனவே பாடம் என்பது செயப்படுபொருளாகும்.

 

2. எழுவாய் ஒன்றை இனங்காண்பதற்குரிய வழிகள் எவை? 

1) எழுவாய் பெயர்ச் சொல்லாக இருக்கும். 

2) தனிச் சொல்லாகவோ அல்லது தொடர்மொழியாகவோ அமைந்திருக்கும். 

3) பேசுவோன் கருத்தை எடுக்கும் இடமாக இருக்கும்.

4) எப்பொழுதும் முதலாம் வேற்றுமையே எழுவாயாக வரும்.

 

3. வாக்கியமொன்றில் பயனிலையானது எவ்வெவ் வடிவங்களில் வரும்? 

1) பெயர்ச் சொல்லாக வரும். 

 உ+ம்:   இது எனது புத்தகம் -  இங்கே புத்தகம் என்பது பெயர்ப் பயனிலையாகும்.

 

2) வினைச்சொல்லாக வரும். 

 உ+ம்:  குமார் பந்து விளையாடினான்.  - இங்கே விளையாடினான் என்பது வினைப்பயனிலையாகும்.

 

3) வினாப் பெயர்ச் சொல்லாக வரும் 

 உ +ம்:  அவர்கள் யார்?     -  இங்கே யார்? என்பது வினாப் பெயர்ப் பயனிலையாகும்.

 

4. செயப்படுபொருள் ஒன்றை இனங்காண்பது எவ்வாறு? 

1) செயப்படுபொருள் வினையின் பயனையுறுவதாய் வரும். 

2) இரண்டாம் வேற்றுமை ஏற்ற பெயர்ச் சொல்லாய் இருக்கும்.

 

5. எல்லா வினையும் செயப்படுபொருளைக் கொள்ளும் தன்மையுடையனவா? காரணம் கூறுக? 

இல்லை.  ஏனெனில் செயப்படுபொருள் குன்றியவினையில் அமையும் வாக்கியங்களில் செயப்படுபொருள் இராது, எனவே எல்லாவினையும் செயப்படுபொருளைக் கொள்ளும் தன்மையற்றவை.

 

6. செயப்படுபொருள் குன்றியவினை என்றால் என்ன?

வினைச்சொல்லொன்று செயற்படுபொருளை ஏற்காது வாக்கியம் ஒன்றில் வருமாயின் அது செயப்படுபொருள் குன்றிய வினை எனப்படும்.

உ+ம்:

அழுதான் - இங்கே அழுதான் எனும் வினைச் (பயனிலை) சொல்லுடன் யாரை? எதை? எவற்றை? எனும் வினாக்களைக் கேட்கும் போது அதற்கு விடை வரவில்லை எனவே இவ்வினை செயப்படுபொருளைக் கொள்ளவில்லை என்பது தெளிவாகிறது.

 

7. செயப்படுபொருள் குன்றாதவினை என்றால் என்ன?

வினைச்சொல்லொன்று செயப்படுபொருளை ஏற்று வாக்கியம் ஒன்றில் வருமாயின் அது செயப்படுபொருள் குன்றாதவினை எனப்படும். 

உ+ம்:

படித்தான் - இங்கே படித்தான் எனும் வினைச் (பயனிலை) சொல்லுடன் எதைப்படித்தான்? என வினவும் போது பாடத்தை எனும் விடை வருகின்றது. எனவே பாடத்தை என்பது செயப்படுபொருள் குன்றாதவினை என்பது தெளிவாகிறது.

 

8. அடைமொழி என்றால் என்ன? 

வாக்கியமொன்றின் பண்பையோ, தன்மையையோ சிறப்பித்து அல்லது விசேடித்துக் கூற வருஞ்சொல் அல்லது சொற்றொடர் அடைமொழி எனப்படும்.

 

9.வாக்கியம் ஒன்றில் இடம்பெறும் அடைமொழிகள் எவை? 

1) எழுவாய் அடைமொழி 

2) பயனிலை அடைமொழி

3) செயப்படுபொருள் அடைமொழி

 

10. எழுவாய் அடைமொழி என்றால் என்ன? 

வாக்கியத்தின் எழுவாயினை விசேடித்து நிற்கும் சொல் அல்லது சொற்றொடர் எழுவாய் அடைமொழி எனப்படும். 

உ+ம்:

சின்னத் தங்கை நடனம் ஆடினாள் - இங்கே தங்கை எனும் எழுவாயை விசேடித்து நிற்கும் “சின்ன” எனும் சொல்லானது எழுவாய் அடைமொழியாகும்.