பேச்சு மொழியும் எழுத்து மொழியும்.

தரம் 7 பாடம் 1:2.1

 

பேச்சு மொழியும் எழுத்து மொழியும்

தமிழ் மொழி பழமையும் புதுமையும் நிறைந்த சிறந்த மொழி. இது பேச்சு மொழி, எழுத்துமொழி என்னும் இரு கூறுகளைக் கொண்டது. இவ்விரண்டு கூறுகளும் நெருங்கிய தொடர்பு கொண்டதாக உள்ளதோடு அவை பல நுட்பங்களையும் கொண்டமைந்துள்ளது.

தனது எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் பிறருக்கு வெளிப்படுத்துவதற்காக மனிதனால் உருவாக்கப்பட்டதே மொழி ஆகும். அது ஒருவர் கருத்தை மற்றொருவர் அறிந்து செயற்பட உதவுகிறது. மொழியின் மூலமாகவே மனிதர்களின் சிந்தனை ஒரு தலைமுறையினரிடமிருந்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. மொழி இல்லையேல் மனித சமூதாயம் இன்று அடைந்திருக்கும் முன்னேற்றத்தை எட்டியிருக்க முடியாது. 

தொடக்க காலத்தில் மனிதர்கள் தனித்தனிக் குழுக்களாக வாழ்ந்து வந்தனர். அவர்கள் தங்களுக்குள் தனித்தனியாக ஒலிக்குறியீடுகளை உருவாக்கிக் கொண்டனர். இதன் காரணமாகவே மொழிகள் பல தோன்றின.