மொழியின் வடிவங்கள்.
தரம் 7 பாடம் 1:2.2
மொழியின் வடிவங்கள்
வாயினால் பேசப்பட்டு பிறரால் கேட்டு உணரப்படுவது பேச்சு மொழியாகும். இவ்வாறு பேசுவதும், கேட்பதும் மொழியின் முதல் நிலை. கண்ணால் கண்டு உணருமாறு வரிவடிவமாக எழுதப்பட்டுப் படிக்கப்படுவது எழுத்து மொழியாகும். இவ்வாறு எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் மொழியின் இரண்டாம் நிலை. ஒருவரை நேரில் காண இயலாத நிலையில் செய்தியைத் தெரிவிக்க எழுத்து மொழி உதவுகிறது. மனிதர்களின் சிந்தனைகள் காலம் கடந்து வாழ்வதற்கும் எழுத்து மொழியே காரணமாகின்றது.
ஒலி வடிவில் அமையும் பேச்சு மொழியானது உடனடிப் பயன்பாட்டுக்கு உரியது. வரிவடிவில் அமையும் எழுத்து மொழியானது நீண்ட காலப் பயன்பாட்டிற்கும் உரியது. உலகில் சில மொழிகள் பேச்சு மொழியாக மட்டுமே உள்ளன. சில மொழிகள் எழுத்து மொழியாக மட்டுமே உள்ளன. ஆனால் தமிழ் மொழியில் பேச்சு, எழுத்து ஆகிய இரண்டு வடிவங்களும் பயன்பாட்டில் உள்ளன.