பேச்சு மொழியில் பொருள் வேறுபாடு பற்றி கற்றுக் கொள்ளுங்கள்.

தரம் 7 பாடம் 1:2.4

 

பேச்சுமொழியில் பொருள் வேறுபாடு

பேசப்படும் சூழலைப் பொறுத்து பேச்சு மொழியின் பொருள் வேறுபடும். எடுத்துக்காட்டாக ' குழந்தையை நல்லா கவனிங்க' என்று கூறும் போது 'கவனி' எனும் சொல் பேணுதல் என்னும் பொருளைத் தருகிறது. நில், கவனி, செல் என்பதில் 'கவனி' எனும் சொல் நின்று, அவதானித்துச் செல் என்னும் பாதுகாப்புப் பொருளைத் தருகிறது. அதுபோலவே ஒலிகளின் ஏற்ற இறக்கமும் பொருள் வேறுபாட்டைத் தரும். எடுத்துக்காட்டாக 'என்னால் பேச முடியாது' எனும் தொடர் ஓங்கி ஒலிக்கும் போது மறுப்பை உணர்த்துகிறது. மென்மையாக ஒலிக்கும் போது இயலாமையை உணர்த்துகிறது. 

ஒரு தொடரில் எந்தச் சொல்லுக்கு அழுத்தம் கொடுக்கின்றோமோ அதற்கேற்ப பேச்சு மொழியில் பொருளும் வேறுபடும். எடுத்துக்காட்டாக, நான் பறவையைப் பார்த்தேன். என்னும் தொடரில் நான் எனும் சொல்லுக்கு அழுத்தம் கொடுத்தால் பறவையைப் பார்ப்பது யார்? என்னும் வினாவுக்கு விடையாக அமையும். பறவையை எனும் சொல்லுக்கு அழுத்தம் கொடுத்தால் 'நீ எதைப் பார்த்தாய்?' என்னும் வினாவுக்கு விடையாக அமையும். பார்த்தேன் எனும் சொல்லுக்கு அழுத்தம் கொடுத்தால் 'நீ பறவையை என்ன செய்தாய்?' என்னும் வினாவுக்கு விடையாக அமையும்.