பேச்சுமொழியும் எழுத்துமொழியும்
தரம் 7 பாடம் 1:2.7
பேச்சுமொழி மற்றும் எழுத்துமொழி.
பேச்சு மொழியை உலகு வழக்கு என்றும், எழுத்து மொழியை இலக்கிய வழக்கு என்றும் கூறுவர். பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் சில வேறுபாடுகள் உள்ளன. பேச்சு மொழியில் சொற்கள் பெரும் பாலும் குறுகி ஒலிக்கும். எழுத்து மொழியில் சொற்கள் முழுமையாக எழுதப்படும். எடுத்துக்காட்டாக ' நல்லாச் சாப்பிட்டான்' என்பது பேச்சுமொழி. 'நன்றாகச் சாப்பிட்டான்' என்பது எழுத்து மொழி.
பேச்சு மொழியில் உணர்ச்சிக் கூறுகள் அதிகமாக இருக்கும். எழுத்து மொழியில் உணர்ச்சிக் கூறுகள் குறைவு. 'உம்', 'வந்து' போன்றவற்றைச் சொற்களுக்கு இடையே பொருளின்றிப் பேசுவது உண்டு. ஆனால் எழுத்து முறையில் இவை இடம் பெறுவதில்லை.
பேச்சு மொழியில் உடல் மொழியும் குரல் ஏற்றத் தாழ்வும் இணைவதால் அது எழுத்து மொழியை விட எளிமையாகக் கருத்தை உணர்த்துகிறது. உடல்மொழி, குரல் ஏற்றத்தாழ்வு போன்றவற்றுக்கு எழுத்து மொழியில் இடமில்லை.
எழுத்து மொழி சிந்தித்து எழுதப்பட்டாலும் பிழைகள் ஏற்பட்டால் திருத்திக் கொள்ள வாய்ப்பு இருப்பதாலும் திருத்தமான மொழி நடையில் அமைகிறது. ஆனால் பேச்சு மொழியில் சிந்திப்பதற்கான நேரம் குறைவு. திருத்திக் கொள்ள வாய்ப்பு இல்லை. எனவே பேச்சுமொழி திருத்தமான இலக்கிய நடையில் அமைவதில்லை.
பேச்சுமொழி மக்களின் மனநிலைக்கு ஏற்ப அமைவதால் விரைந்து மாற்றமடைந்து வருகிறது. எழுத்து மொழி பெரும்பாலும் மாறுவதில்லை. மேலும் பேச்சு மொழியில் பிறமொழிச் சொற்கள் மிகுதியாக இடம் பெறுகின்றன. ஆனால் எழுத்து மொழியில் பெரும்பாலும் மொழித் தூய்மை பேணப்படுகிறது.
பேச்சு மொழியில் எழுத்துக்களை மாற்றி ஒலிப்பதும் உண்டு. 'இ' என்பதை 'எ' என்றும் 'உ' என்பதை 'ஒ' என்றும் மாற்றி ஒலிப்பர். எடுத்துக்காட்டாக 'இலை' என்பதை 'எல' என்றும் 'உலகம்' என்பதை 'ஒலகம்' என்றும் ஒலிப்பர். இம் மாறுபாடுகள் எழுத்து மொழியில் இல்லை.
ஒரு மொழி உயிர்ப்போடு வாழ்வதற்குப் பேச்சுமொழியும் காலம் கடந்து வாழ்வதற்கு எழுத்துமொழியும் தேவைப்படுகிறது. இவ்விரு வடிவங்களையும் சரியாக அறிந்து கொண்டால் மொழியின் நுட்பங்களைப் புரிந்து கொள்ள முடியும்.
தமிழில் பேச்சு மொழிக்கும், எழுத்து மொழிக்கும் இடையே வேறுபாடு உண்டு. எனவே தமிழை இரட்டை வழக்கு மொழி என்பர். மேடைப் பேச்சிலும், வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களிலும் எழுத்து மொழியாகிய இலக்கியத் தமிழே பயன்பட்டு வந்தது. ஆனால் இலக்கியத்தில் அந்நிலை பெரும்பாலும் மாறி விட்டது. பேச்சுத்தமிழ் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நாளேடுகள் மற்றும் பருவ இதழ்களில் இன்றும் எழுத்துத் தமிழே பயன்படுத்தப்பட்டு வருகிறது. பேச்சுத் தமிழில் காலந்தோறும் ஏற்பட்டுவரும் மாற்றங்களைத் தவிர்க்க இயலாது. ஆனால் ஊடகங்களிலும் இலக்கியங்களிலும் திருத்தமான தமிழையே பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் தம் தாய்மொழியைச் சிதையாமல் காக்க முடியும்.