கடமை

தரம் 7 பாடம் 3:1.1

 

கடமை

 

கடமை என்பது, பொதுவாக அல்லது குறிப்பிட்ட சில   சூழ்நிலைகள் ஏற்படும்போது செய்வதாக ஏற்றுக்கொள்கின்ற அல்லது செய்வதற்கு எதிர்பார்க்கின்ற ஒரு விடயம் ஆகும். பல கடமைகள் சட்டத்தினால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. சட்டப்படியான கடமைகளில் இருந்து தவறுவதற்கு தண்டனைகளும் விதிக்கப்படுவது உண்டு. கடமைகளைச் செய்யும்போது சில வேளைகளில் சொந்த நலன்களைத் தியாகம் செய்யவேண்டி ஏற்படுவது உண்டு. மாறாகத் தன்னலம் கருதியும் கடமையைச் செய்வதும் உண்டு.

நீண்ட காலத்துக்கு முன் வாழ்ந்த உரோம மெய்யியலாளரான சிசேரோ, கடமை நான்கு மூலங்களில் இருந்து ஏற்படக்கூடும் எனக் குறிப்பிடுகின்றார். மனிதனாக இருப்பதன் விளைவாக, ஒருவர் தனது வாழ்வில் இருக்கும் இடத்தினால், ஒருவருடைய இயல்பின் காரணமாக, ஒருவருடைய ஒழுக்கம் சார்ந்த எதிர்பார்ப்புகளின் காரணமாக என்கிறார்.

அதிகாரம், மதம், சமூக நெறிமுறைகள் ஆகியவற்றைப் பொறுத்து, சட்டத்தினாலோ, பண்பாட்டினாலோ விதிக்கப்படும் கடமைகள் பெருமளவு வேறுபட்டு அமைகின்றன. நான் ஒன்றைச் செய்ய வேண்டும் என்றால் முதலில் அது என் கடமை என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். 

சில குறிப்பிட்ட காரியங்கள் நம் முன் நிகழும்போது, இயல்பாகவோ அல்லது பழக்கத்தின் காரணமாகவோ குறிப்பிட்ட வகையில் நடந்துகொள்ளும் உள்ளுந்தல் நம்மிடம் தோன்றுகிறது. இத்தகைய உள்ளுந்தல் எழுந்ததும் மனம் அந்தச் சூழ்நிலையைப்பற்றி சிந்திக்கத் தொடங்குகிறது. அந்தச் சூழ்நிலையில் இன்ன வகையில் நடந்துகொள்வது நல்லது என்று சில வேளைகளில் நினைக்கிறது. வேறு சில வேளைகளிலோ, அதே சூழ்நிலையில் அப்படி நடப்பது தவறு என்று நினைக்கிறது. 

பிறப்பையும் வாழ்க்கை நிலையையும் அடிப்படையாகக் கொண்ட கடமைகளைப்பற்றி பகவத்கீதை பல இடங்களில் கூறுகிறது. பிறப்பும் வாழ்க்கையும் மற்றும் சமுதாயத்தில் ஒருவன் பெறுகின்ற இடமுமே அவனது வாழ்க்கையின் பல்வேறு செயல்பாடுகளின் மீது அவன் கொள்கின்ற மனநிலையையும் தார்மீக நிலையையும் பெருமளவிற்கு நிர்ணயிக்கின்றன. எனவே நாம் எந்தச் சமூகத்தில் பிறந்துள்ளோமோ, அந்தச் சமுதாயத்தின் இலட்சியங்களுக்கும் பழக்க வழக்கங்களுக்கும் ஏற்ப நம்மை உயர்த்தவும் உன்னதப்படுத்தவும் உதவுகின்ற செயலே நமது கடமை ஆகிறது.

உலகில் தாயின் இடம் மிகவும் உயர்ந்தது. அந்த ஓர் இடத்தில்தான் மிகவுயர்ந்த சுயலமின்மையைக் கற்கவும் செயல்முறைப்படுத்தவும் முடியும். தாயன்பை விட மேலான அன்பு ஒன்று இருக்க முடியுமானால் அது இறையன்பு மட்டுமே. மற்ற எல்லாமே தாழ்ந்தவைதான். முதலில் பிள்ளைகளைப்பற்றி நினைப்பதும் அதன்பிறகே தன்னைப்பற்றி நினைப்பதும் ஒரு தாயின் கடமையாகிறது.