காடு

தரம் 7 பாடம் 4:1.1

 

காடு 

மரங்கள் அடர்ந்த நிலப்பகுதி "காடு" என்று அழைக்கப்படுகிறது. இதனை வனம், கானகம், அடவி, புறவு, பொதும்பு என பல சொற்களால் தமிழில் அழைப்பர். தற்போதைய நிலையில் புவி மேற்பரப்பின் 9.4 வீதம்  அல்லது மொத்த நிலப்பரப்பின் ஏறத்தாழ 30 வீதம் காடுகளினால் மூடப்பட்டுள்ளது. முன்னர் காடுகள் நிலப்பரப்பின் 50 வீதம் வரை மூடியிருந்ததாக மதிப்பிட்டுள்ளனர். உலகின் பல பகுதிகளிலுமுள்ள காடுகள் காற்றிலுள்ள கரியமில வாயுவை உட்கொள்கின்றன. உயிர்க்கோளத்தில் முக்கியமான அம்சமாக விளங்கும் காடுகள், பல உயிரினங்களுக்குப் புகலிடமாக விளங்குகின்றன.

காடுகள் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மண் அரிப்பையும் தடுக்கின்றன. காடுகளில் பல வகைகள் உள்ளன. மரங்களை அடிப்படையாகக் கொண்டு காடுகளை வகைப்படுத்துவது வழமை. எனினும், காட்டுச் சூழல் மண்டலம், பல்வேறு வகையான விலங்குகள், நுண்ணுயிர்கள் போன்றவற்றையும் உள்ளடக்குகின்றன. அத்துடன், ஆற்றல், சுற்றோட்டம், உணவு வட்டம் போன்ற இயற்பியல் மற்றும் வேதியியல் சார்ந்த செயற்பாடுகளும் இதற்குள் அடங்குகின்றன.

சதுப்பு நிலக்காடுகள், பசுமை மாறாக் காடுகள், இலையுதிர் காடுகள், ஊசியிலைக் காடுகள் என்பன சில வகைகளாகும். வெப்பமண்டலக் காடுகள் உலகில் வாழும் 50 சதவீத உயிரினங்களுக்கு உறைவிடமாக விளங்குகின்றன.

காடுகள் பல்வேறு தளங்களாலான அமைப்பைக் கொண்டவை. இவற்றில் மரங்களின் மேல் பகுதிகளாலான மேல் தளமும், உயரம் குறைந்த தாவரங்களினாலானக் கீழ்த்தளமும் அடங்கும். சிக்கல் தன்மை கூடிய காடுகளில் ஐந்து தளங்கள் வரை இருக்கும். மிகவும் உயரத்தில் உள்ள மேல் தளம் உயர் மரங்களின் மேற்பகுதிகளால் ஆனது. அதற்குச் சற்றுக் கீழுள்ள தளம் நடுத்தர உயரம் கொண்ட சிறு மரங்களால் ஆனது. அதற்கு அடுத்த தளம் உயரம் குறைவான குறு மரங்களினால் அமையப் பெற்றது. மேலிருந்து நான்காவது நிலையில் உள்ள தளம் செடி வகைகளைக் கொண்டிருக்கும், ஐந்தாவதான நிலத்தளம் புல், பூண்டுகளினால் ஆனது. நான்காவது, ஐந்தாவது தளங்கள் முறையே செடித்தளம், பூண்டுத்தளம் எனவும் குறிப்பிடப்படுவது உண்டு. சில வேளைகளில் நில மட்டத்தில் பாசிகளைக் கொண்ட ஒரு தளமும் இருப்பது உண்டு.

வளம் மிகுந்த நிலப் பகுதிகளில் அமைந்த பெருங்காடுகளிலேயே ஐந்து தளங்களைத் தெளிவாகக் காண முடியும். வளம் குறைந்த பகுதிக் காடுகளில் பெரும்பாலும் மேல் தளம், கீழ்த் தளம், நிலத் தளம் என மூன்று தளங்களையே இனங்காண முடியும். வளமற்ற வரண்ட பகுதிகளில் உள்ள காடுகள் சிலவற்றில் தளங்களைத் தெளிவாக இனங்கண்டு கொள்ள முடியாத வகையில் இடைப்பட்ட நிலைகளிலும் தாவரங்கள் இருப்பதைக் காணலாம்.

மரங்கள் வளர்வதற்கு உகந்த எல்லாப் பகுதிகளிலும் காடுகளைக் காண முடியும். அடிக்கடி தீப்பிடிக்கும் வாய்ப்புள்ள இடங்களையும், மனித நடவடிக்கைகளினால் மாற்றங்களுக்கு உள்ளான சூழல் கொண்ட இடங்களையும் வேறுவகையில் பாதிப்புக்கு உள்ளான இடங்களையும் தவிர்த்து, மரம் வளர் எல்லைக் கோட்டுக்கு உட்பட்ட எல்லா உயரங்களிலும் காடுகள் உள்ளன. 

காடுகளைப் பல்வேறு வழிகளில் வகைப்பாடு செய்துள்ளனர். அவற்றுள் ஒன்று காடுகள் அமைந்துள்ள உயிர்ச்சூழலை அடிப்படையாகக் கொண்டது. இந்த வகைப்பாட்டில் அக்காடுகளில் உள்ள முதன்மையான தாவர வகைகளின் இலைகளினது இருப்பு நிலையும் (பசுமையிலைத் தாவரம், இலையுதிர் தாவரம்) கவனத்தில் கொள்ளப்படுகிறது. இன்னொரு முறையிலான வகைப்பாடு காட்டிலுள்ள முதன்மை இனங்கள் அகன்ற இலைத் தாவரங்களா?, ஊசியிலைத் தாவரங்களா? என்பதை அடிப்படையாகக் கொண்டது.

பலரும் பல்வேறு வகைப்பாட்டு முறைகளை முன் மொழிந்திருந்தாலும், எல்லோரும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக எதுவும் அமையவில்லை. ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம், உலகக் காப்புக் கண்காணிப்பு மையம் என்பன இணைந்து உருவாக்கிய வகைப்பாடு பிற வகைப்பாடுகளை எளிமையாக்கி உருவாக்கியது ஆகும். இந்த முறை உலகின் காடுகளை 26 முதன்மை வகைகளாக வகைப்படுத்துகிறது. இது, காலநிலை வலயங்களையும், மரங்களின் வகைகளையும் கருத்தில் கொள்கிறது. இந்த 26 வகைகளையும் 6 பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.