கருங்காற் குறிஞ்சி
தரம் 7 பாடம் 6:1.1
கருங்காற் குறிஞ்சி
மலைக்காடுகளும் புல்வெளிகளும் இணைந்திருக்கும் பிரதேசங்களில் செழித்து வளரும் குறிஞ்சிப் பூ நீல நிறமானது. எனினும் மஞ்சள் நிறப் பூப்பூக்கும் ஒரு அரியவகைக் குறிஞ்சி வகையும் உண்டு. கருங்காற் குறிஞ்சி பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் மலரும்.
நாங்கள் ஒவ்வொரு வருடப்பிறப்பையும் காட்டில் கழிக்கும் குடும்ப வழக்கத்திற்கேற்ப அந்த ஆண்டு குடகில் உள்ள பிரம்மகிரி மலைக்குச் செல்லத் தீர்மானித்தோம். தலைக் காவேரிக்கு மறுபுறம் உள்ள மலைச்சரிவில் வனத்துறையினரின் ஒரு சிறிய விடுதி உள்ளது. மதியம் பெங்களூரை விட்டுப் புறப்பட்டு இருட்டிய பின் இவ்விடுதியை அடைந்தோம்.
மறுநாள் காலை தேநீர் குடித்து விட்டு நாங்கள் நால்வரும் விடுதிக்கு வெளியே ஒரு ஒற்றையடிப் பாதையில் நடக்க ஆரம்பித்தோம். சுற்றிலும் மூடுபனி சூழ்ந்திருந்ததால் காட்டுப்பாதையில் சில மீட்டர் தூரமேப் பார்க்க முடிந்தது. சிறிது தூரம் சென்றிருப்போம். திடீரென திரையொன்றை தூக்கினாற் போல மூடுபனி விலகியது. எங்கு நோக்கிலும் நீல நிறப் பூக்கள், கண்ணுக் கெட்டிய தூரம் வரை மலையடுக்குகள் நீல நிறப் போர்வை ஒன்றால் போர்த்தியது போல் தோன்றியது. அவை குறிஞ்சிப்பூக்கள்.
மேற்கு தொடர்ச்சி மலையில் சுமார் 1600 மீற்றர் உயரத்தில் மழைக்காடுகளும் புல்வெளிகளும் இணைந்திருக்கும் பிரதேசங்களில் செழித்து வளரும் ஒரு புதர்ச்செடி இது. நீலகிரியிலிருந்து சயாதிரி மலைகள் வரை மலையின் சரிவுகளில், புதர்களாகவும் குறு மரங்களாகவும் வளரும் இச்செடியில் பல வகைகள் உண்டு.
எல்லா வகைகளும் கூட்டமாகத்தான் வளரும். குறிஞ்சி மலர்கள் நீல வண்ணமானது என்றாலும், மஞ்சள் நிறப் பூப்பூக்கும் ஓர் அரிய குறிஞ்சி வகையும் உண்டு. எல்லா வகை குறிஞ்சிச் செடிகளும் பல ஆண்டுகளுக்கு ஒரு முறையே வளரும். அதுவும் ஒவ்வொரு செடியும் ஒரே ஒரு முறை தான் மலரும்.
பூக்கும் காலம் முடிந்ததும் அச்செடி பட்டுப் போகும். பின் உரிய காலத்தில் அதே இடத்தில் புதிய செடிகள் முளைத்துச் செழிக்கும்.
இச்செடி ஏறக்குறைய ஒரு மீற்றர் உயரம் இருக்கும். தண்டு சிவப்பாகவும் காம்புகளின் கணுக்கள் கறுப்பாகவும் இருக்கும். மதுரைக் குறிஞ்சி, கருங்காற் குறிஞ்சி என்று குறிப்பிடுவது இத்தாவரத்தைத்தான் இது பூக்கும் காலத்தில் மலைச் சரிவே நீலமாகக் காணப்படும். இந்த மலரால் தான் நீலகிரி மலைக்கு அப்பெயர் வந்தது என்றும் சிலர் கூறுகின்றார்கள்.
இந்த வகைக் குறிஞ்சிப்பூ பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் மலரும். குறிஞ்சி மலரும் காலத்தில், அப்பூக்களில் நிறையக் கிடைக்கும் தேனை நாடி மலைத் தேனீக்கள் பெருமளவில் தோன்றி பாறை இடுக்குகளில் கூடுகளைக் கட்டித் தேன் சேமிக்கும். மற்றெல்லா தேனிலும் சிறந்ததாகப் போற்றப்படும் இத்தகைய தனிப்பூத்தேனைக் குறிஞ்சி நாடனின் நட்புக்கு "கருங்காற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந் தேனிழைக்கும் நாடனொடு நட்பே" என்று ஒப்புவமையாகக் குறுந்தொகை குறிப்பிடுகின்றது.
இயற்கை வரலாற்றாசிரியர்கள் தமிழ் நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையில் பாலக்காட்டுக் கணவாய்க்குத் தெற்கே உள்ள மலைகளைப் பழனி மலைத்தொடர் என்றும், வடக்கே உள்ள மலைகளை நீலகிரி மலைத் தொடர்கள் என்றும் குறிப்பிடுவர். பழனி மலைத் தொடரில் மூணார் அருகே உள்ள ஆனைமுடி என்ற சிகரத்தைச் சூழந்த பகுதிகளில் குறிஞ்சி ஏராளமாக வளர்கின்றது.