பயன் தரும் பனை
தரம் 7 பாடம் 9:1.1
பயன் தரும் பனை
பனை வறண்ட பிரதேசங்களிலே வளரும். இலங்கையில் வடக்கு, கிழக்கு, மாகாணங்களில் அதிகமாக இதனைக் காணலாம். எவ்வித வரட்சியையும் தாங்கும் சக்தி இதற்கு உண்டு.
பனை நீண்டு உயர்ந்து வளரும். அறுபது முதல் எண்பது அடிவரை இது வளரும். இதற்குக் கிளைகள் இல்லை. இதன் வட்டிலே ஓலைகள் உண்டு. வளர்ந்த பனையின் ஓலைகளுக்கு இடையில் பாளைகள் தோன்றும், இந்தப் பாளைகளைக் கொண்டே ஆண்பனை, பெண்பனை என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
பெண் பனையின் பாளைகளில் சிறுசிறு குரும்பைகள் தோன்றும். குரும்பை முற்றிப் பின் நுங்காகும். நுங்கு மிகவும் இனிமையானது. நுங்கு முற்றியதும் பழமாகும். பனம் பழத்தில் இருந்து பனாட்டுச் செய்கிறார்கள். பனம் விதையிலிருந்து கிழங்கு உண்டாகும் பனங்கிழங்கும், பனாட்டும் மனிதர்களுக்கு உணவாகிறது.
பனையிலிருந்து பதநீரும், கள்ளும் சேகரிப்பார்கள், பதநீரைக் காய்ச்சிப் பனங்கட்டி செய்வார்கள். பனங்கட்டி மிகவும் இனிமையானது. பனைமரம் வீட்டுக் கூரைக்குத் தேவையான மரமாகவும், பனை ஓலை வீடு வேயவும், வேலி அடைக்கவும், பாய், கூடை முதலிய பலவகையான பொருட்கள் இழைக்கவும் உதவும்.
பனையின் எல்லாப் பாகங்களும் மனிதருக்கு உபயோகம் உள்ளவை. இதனால்தான் பனையைப் பூலோக கற்பகதரு என்று அழைக்கின்றார்கள்.
“பனை வளர்ப்போம், பயன் பெறுவோம்”