கல்வியின் சிறப்பு

தரம் 7 பாடம் 10:1.1

 

கல்வியின் சிறப்பு 

உலகில் இருவகைச் செல்வங்கள் உள்ளன. ஒன்று கல்விச் செல்வம், மற்றையது பொருட் செல்வம். பொருட்செல்வம் பிறருக்குக் கொடுக்குந்தோறும் குறைவுபடும், நீராலும், நெருப்பாலும், அழியக்கூடியது, பிறரால் கவரக்கூடியது. ஆனால் கல்விச் செல்வமோ அழிவற்றது, நீராலோ, நெருப்பாலோ அழியாதது, கள்வரால் களவாட முடியாதது, பிறருக்குக் கொடுக்கும் தோறும் பெருகிக் கொண்டே செல்லும். இதனால் தான் கல்விச் செல்வத்துக்கு நிகரான செல்வம் வேறில்லை என்று நம் முன்னோர் போற்றினர். 

மனிதரிடத்துள்ள அறியாமையைப் போக்கி அறிவு ஒளி ஊட்டுவது கல்வி. கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்புண்டு. கற்றறிந்தவனே கண்ணுடையவனெனக் கருதப்படுவான். 

“எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்” என்று நம்முன்னோர் கூறியுள்ளனர். மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் கற்க வேண்டியவற்றைக் கற்று, கற்ற நெறிப்படி ஒழுக வேண்டும். இதனையே திருவள்ளுவரும் 

“கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக” என்றார். 

கற்க வேண்டியவற்றை நாம் கருத்தூன்றிக் கற்க வேண்டும். கற்க வேண்டிய பருவத்தில் கற்க வேண்டும். இளமையிற் கற்பதே சிறந்த அழகாகும். இக்கல்வி அழகினைப் பெறுவதற்கு நாம் சலியாது முயற்சிக்க வேண்டும். கற்பதற்கு வயதுக்கட்டுப்பாடே இல்லை, வாழ்நாள் முழுவதுமே கற்கலாம். “பாடை ஏறினும் ஏடது கைவிடேல்” என்னும் கூற்றை நாம் மறக்கக் கூடாது. 

அழியாத செல்வமான கல்விச் செல்வத்தைப் பெற்று இவ்வையகத்தில் வாழ்வாங்கு வாழ நாம் முயற்சிப்போமாக.