வாக்கிய இயைபு
தரம் 7 பாடம் 10:2.1
வாக்கிய இயைபு
சொற்கள் இணைந்தே வாக்கியங்கள் ஆகின்றன. பொருள் தரக்கூடியவாறு ஒழுங்கு முறையில் சொற்கள் இணைந்து முற்றுப் பொருளைத் தருமாயின் அது வாக்கியமாகும். வாக்கியம் எழுவாய், பயனிலை, செயற்படுபொருள் என்பவற்றைக் கொண்டு அமையும். மேலும் திணை, பால், எண், இடம், காலம் ஆகிய இலக்கணக் கூறுகள் ஒன்றோ பலவோ வாக்கியத்தில் இயைபுற அமைதல் வேண்டும்.
உதாரணம்
தம்பி நேற்று கொழும்புக்குப் போனான்.
பாடசாலை நாளை மூடப்படும்.
பசு பால் தரும்.
பாலன் பந்தை அடித்தான்.
அவன் ஆலயத்திற்குச் சென்றான்.
அவர்கள் காலையில் படித்தார்கள்.
திணை
உயர்திணை – மனிதரைச் சுட்டும் பெயர்கள் உயர்திணையாகும்.
அஃறிணை – மனிதர் அல்லாத ஏனைய உயிருள்ள, உயிரற்ற பொருள்களைச் சுட்டும் பெயர்கள் அஃறிணையாகும்.
பால்
ஆண்பால் – அவன், வந்தான், விமலன்
பெண்பால் – அவள், வந்தாள், கமலினி
பலர்பால் – அவர்கள், நண்பர்கள், வந்தார்கள்
ஒன்றன்பால் - அது, மாடு, மேசை, வந்தது
பலவின்பால் – அவை, மாடுகள், மேசைகள், வந்தன
எண்
ஒருமை – ஒன்றைக் குறிப்பது ஒருமையாகும். உதாரணம் – கண், பல், கடை
பன்மை – ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் குறிப்பது பன்மையாகும்.
உதாரணம் – கண்கள், பற்கள், கடைகள்
இடம்
தன்மை – நான், யாம். நாம், வந்தேன்
முன்னிலை – நீ, நீங்கள், நீர், நீவர், வந்தாய்
படர்க்கை – அவன், அவள், அவர்கள், அது, அவை, வந்தான்
காலம்
இறந்தகாலம் – அவன் கொழும்புக்கு போனான்.
( செயல் முடிந்துள்ளது )
நிகழ்காலம் – அவன் கொழும்புக்குப் போகின்றான்.
( செயல் நடை பெற்றுக்கொண்டிருக்கின்றது)
எதிர்காலம் – அவன் கொழும்புக்குப் போவான்.
( செயல் இடம்பெற இருக்கிறது)