தைப்பொங்கல்

தரம் 2 பாடம் 11 .1

தைப்பொங்கல்

தைப்பொங்கல் என்பது உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதும்  சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் நன்றி செலுத்தும் முகமாக ஒரு தனிப்பெரும் விழாவாக தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகையாகும். தமிழர் திருநாளாக தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆபிரிக்கா, என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.

ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சர்க்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் செய்து சூரியனுக்கு படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும்.

முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல். தைப் பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்னரே கொண்டாட்ட உற்சாகம் தொடங்கி விடும். புதுப்பானை, புத்தாடை என பொங்கலுக்குத் தேவையான பொருட்களை அனைவரும் ஆயத்தப்படுத்திக் கொள்வர்.

பொங்கலன்று அதிகாலை எழுந்து, குளித்து முடித்து, புத்தாடை அணிவார்கள். வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு அதன் நடுவில் புதுப்பானைவைத்து அதில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்கல் வைப்பர்.

புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர். முற்றத்திற் கோலமிட்டு, தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து, விளக்கேற்றி, சூரியனை வணங்கி, பொங்கலிடத் தொடங்குவர்.

இங்கு சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைப்பார்கள். பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று “பொங்கலோ பொங்கல்!, பொங்கலோ பொங்கல்!” என்று உரக்கக் கூவி குரவையிடுவார்கள். பிறகு பொங்கலை சூரியனுக்குப் படைத்து வழிபடுவார்கள். பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே தாம் நுகர்வார்கள். இது தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு உள்ளது என்பர்.

எல்லா மதத்தவர்களாலும் விசேடமாக கொண்டாடப்படும் தைப் பொங்கலை நீங்களும் உங்கள் வீடுகளில் கொண்டாடுவீர்கள் என நம்புகின்றோம்.