ஓடாத கப்பல்
தரம் 2 பாடம் 16.1
ஓடாத கப்பல்
காற்று மெல்ல வீசியது. கறுத்த மேகம் வானையே மூடிக் கொண்டது. மெல்லிய தூறலுடன் மழை பெய்ய ஆரம்பித்தது.
சோ... என்ற ஓசையுடன் கனமழை பெய்தது. அப்போது வெள்ள நீர் பள்ளங்களை நோக்கி சிறு ஆறு போன்று அழகாய் பாய்ந்தோடியது. அதில் எங்கோ இருந்து சிறு கட்டைத்துண்டொன்று மிதந்து போவதைக் கண்ட கமல் சிறிய கப்பல் ஒன்றைச் செய்ய நினைத்தான்.
மரத்துண்டுகள், கடதாசி என பலவகைக் கழிவுப்பொருட்களை எடுத்துக் கொண்டான். அப்போது அவனுடன் கப்பல் செய்ய சீலாவும் இணைந்து கொண்டாள். வேலைகள் வேகமாய் நடந்தன. அவ்வாறே அழகிய மரக்கப்பல் ஒன்று தயார் ஆனது.
அதனை நீரில் விட்டு அழகு பார்க்க இருவரும் ஓடும் நீர் நிலைக்கு சென்றனர். நீரில் கப்பலை விட்டனர். ஆனால் கப்பல் நீரில் ஓடாமல் நீருக்குள் மூழ்கிப் போனது. மீண்டும் முயற்சி செய்தனர். எனினும் மீண்டும் மீண்டும் மூழ்கியே போனது.
இதனால் கமலும், சீலாவும் மிகவும் கவலைப்பட்டனர். அப்போது அவ்வழியே ஆசிரியர் வந்தார். அவர் கப்பலை எடுத்துப்பார்த்து கப்பலில் சிறு பிழை இருந்ததை உணர்ந்தார். பின்பு கம்புத்துண்டொன்றினை எடுத்து ஒரு புறம் பொருத்தி சரி செய்தார். அதை அவர்களுக்கும் காட்டினார். அதன் பின் கப்பலின் இரு புறமும் சமமாக இருந்தது. அப்போது கப்பலை இருவரும் நீரில் விட்டனர். கப்பல் நீரில் மிதந்து சென்றது.
மாணவர்களே, இந்த விளையாட்டு உங்களுக்குப் பிடித்திருக்கும் என நம்புகின்றேன். நீங்களும் உங்கள் வீட்டில் உள்ள கழிவுப் பொருட்களைப் பயன்படுத்தி பெரியவர்களின் உதவியுடன் இவ்வாறு கப்பல் செய்து விளையாடுங்கள்.