ஒட்டகத்தை ஏமாற்றிய நரி.
தரம் 3 பாடம் 6.1
ஒட்டகத்தை ஏமாற்றிய நரி
ஒட்டகமும் நரியும் நல்ல நண்பர்கள். இருவரும் ஒன்றாகவே உணவு தேடச் செல்வார்கள், ஒன்றாகவே சாப்பிடுவார்கள். ஆனால் ஒட்டகம் ஒரு வெகுளி, நண்பனுக்காக எதையும் செய்யும். நரியோ தந்திர குணம் கொண்டது. சுயநலமாகவே நடந்துகொள்ளும். இப்படியான நிலையில் ஒருநாள் நரி மட்டும் வேட்டைக்குச் சென்றது. அப்போது அங்கு வந்த வேட்டைக்காரன் கம்பால் எறிய நரியின் கால் உடைந்தது.
நடக்க முடியாமல் இருந்தமையால் நரியால் உணவு தேடிச் செல்ல முடியவில்லை. அது முடங்கிக் கிடந்தது. நண்பனின் இந்த நிலையைப் பார்க்க முடியாத ஒட்டகம் நரியைத் தோள் மேல் தூக்கிச் சென்றது. இந்தப் பயணம் நரிக்கு மிகவும் பிடித்திருந்தது. பின்னர் ஒரு நாள் நரியின் கால் குணமடைந்தது. இதனை ஒட்டகத்திடம் சொல்லாமல் இன்னும் சுகம் வரவில்லை. என்னைத் தூக்கி செல்வாயா? என கேட்டது. ஒட்டகம் உடனே சரி என்று சொல்லி முதுகின் மேல் வைத்துத் தூக்கிச் சென்றது.
ஒரு கரும்புத் தோட்டத்தை அடைந்ததும் நரி தன்னை மறந்து துள்ளி குதித்து ஓடியது. இதைக் கண்ட ஒட்டகம், இந்த நரி என்னை ஏமாற்றி விட்டான் இவனுக்கு என்ன செய்கிறேன் பார் என நினைத்துக் கொண்டது. பின்பு இருவரும் கரும்பு சாப்பிடத் தொடங்கினர்.
நரி வயிறு நிறைய உண்டதும் ஊளையிட ஆரம்பித்தது. “ஊளையிடாதே நாம் மாட்டிக் கொள்ளவோம்” என ஒட்டகம் கூறியது. “வயிறு நிரம்பினால் எனக்கு ஊளை வரும், அது என் வழக்கம் நான் என்ன செய்வது” என கூறிக்கொண்டு நரி ஊளையிட்டது. உடனே தோட்டக்காரன் ஓடிவந்து இருவரையும் தாக்க முயன்றான். ஒட்டகத்தின் மேல் நரி ஏறியதும் இருவரும் ஓட ஆரம்பித்தனர். அப்போது ஒட்டகம் நரிக்கு நல்ல பாடம் ஒன்றைக் கற்பிக்க நினைத்தது. ஆற்றங்கரையைக் கண்டதும் ஒட்டகம் “நான் குளிக்கப் போகின்றேன்” என்றது. அப்போது நரி “நீ குளித்தால் நான் மூழ்கி விடுவேன்” என்றது.
அப்போது ஒட்டகம் “சாப்பிட்டதும் ஊளையிடுவது உன் வழக்கம். அது போல் சாப்பிட்டதும் குளிப்பது என் வழக்கம்” எனக் கூறிக்கொண்டு ஆற்றிலே இறங்கியது. நரி நீந்தத் தெரியாமல் நீருக்குள் மூழ்கியது. ஒட்டகம் கரையில் வந்து நரியைப் பார்த்து நல்ல நண்பனின் அன்பை ஏமாற்றினால் அந்த அன்பைத் திரும்பப் பெறுவது சிரமம் எனக் கூறி நல்ல பாடம் புகட்டியது.