சூழல் மாசடைதல்
தரம் 4 பாடம் 2.1

சூழல் மாசடைதல்
எம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் சூழல் எனப்படும். மனிதராகிய நாம் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வாழ்வதற்குச் சூழல் அவசியமாகின்றது. மனிதரது எல்லாத் தேவைகளுக்கும் சூழலே இருப்பிடமாகும். நம்மைச் சுற்றியுள்ள நிலம், நீர், வளி அனைத்தும் சூழலே. இவை பல்வேறு காரணிகளால் மாசடைகின்றன. மனிதர்கள் தமது தேவைக்காக இவற்றை மாசடையச் செய்கின்றனர்.
அதிகரித்த போக்குவரத்துச் சாதனங்கள் வெளியிடும் புகை மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை போன்றவற்றால் வளி மாசடைகின்றது. தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் குடிநீர்க் கிணறுகளில் கலந்து விடுகின்றது. இதனால் குடிநீர் அசுத்தமாகின்றது. கழிவுநீர் தேங்கி நிற்பதால் தொற்று நோய்களும் ஏற்படுகின்றன.
மக்கள் தொகை அதிகரிப்பால் நகரங்களில் பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவ்வாறு சூழல் மாசடைவதனால் எமக்குப் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. இவற்றை இல்லாமல் செய்வதற்குச் சூழலைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் காரணிகளைக் கண்டறிந்து அவற்றைத் தடுத்திட முற்கூட்டியே நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சூழல் சுத்தம் பேணுதலே சுகவாழ்வுக்கு அடித்தளம் என்பதை உணர்ந்து செயற்படுவோம்.