முதியோரைப் பேணுதல்
தரம் 4 பாடம் 3.1

முதியோரைப் பேணுதல்
மனிதர்களின் வாழ்வில் முதுமைக் காலம் எல்லோருக்கும் வரும். முதுமைக் காலத்தில் மகிழ்வாக வாழ்வதும் துயரங்களுடன் வாழ்வதும் முதியோர்களின் அன்றாட நடைமுறைகளில் இருந்து வரும் நிலையாக உள்ளது. முதியோரை மதிக்கும் பண்பு ஒவ்வொரு மனிதர்களுக்கும் இருத்தல் வேண்டும். பெரியோரை மதித்தல் என்பது அவர்களைக் கண்டதும் எழுந்து நிற்றல், விழுந்து வழிபடல், அவர்களிடமிருந்து பொருட்களை வாங்கும் போதும், கொடுக்கும் போதும் இரண்டு கைகளாலும் வாங்க வேண்டும், கொடுக்க வேண்டும் என்பதல்ல முக்கியம். அவர்களை மனதார மதிக்க வேண்டும். இந்த மனப்பாங்கே முதியோரை மதிக்கும் பண்பை மனிதர்களிடம் உருவாக்கும்.
முதியோர் எனப்படுபவர் பழைய வீசப்படவேண்டிய பொருளல்ல. அவர்களிடம் இருந்து நாம் எமது வாழ்க்கைக்குத் தேவையானவற்றைப் பெற முடியும். அவர்கள் புத்தகங்களாவர் அவர்களை நாம் படித்தல் வேண்டும். வீட்டில் உள்ள முதியவர்கள் சிறியவர்களுக்கு நல்ல கதைகளைக் கூறுவார்கள், அறிவுரைகள் கூறுவார்கள், பழக்கவழக்கங்களைப் போதிப்பார்கள், தாம் வாழும் இடத்தில் இப்படித்தான் வாழவேண்டும் என்பதையும் கூறுவார்கள். எனவே சிறுவர்களே முதியோரைப் பேணுதல் எமது தலையாய கடமையாகும்.