மன்னனும் மந்திரியும்
தரம் 4 பாடம் 6.1
மன்னனும் மந்திரியும்
இராக நாட்டை 'மதி' என்ற ராஜா ஆண்டு வந்தார். ஆனால் பெயருக்கு ஏற்ற அளவுக்குப் புத்திசாலியாக அவர் இல்லை. மந்திரி வரதனின் புத்திசாலித்தனத்தை வைத்துதான் ஓரளவு நாட்டை ஆண்டு வந்தார். ஆனால் மந்திரி அவ்வளவு நல்லவர் இல்லை. ஒருநாள் ராஜாவும் மந்திரியும் காட்டு வழியாக வந்து கொண்டிருந்தனர்.
காட்சி 1
(அப்போது நரிகள் ஊளையிட்டன.)
ராஜா : மந்திரியாரே என்ன சத்தம் இது?
மந்திரி : நரிகள் அழுகின்றன மன்னா!
ராஜா : என் நாட்டில் நரிகள் கூட அழக்கூடாது. ஏன் அழுகின்றன?
மந்திரி : மார்கழி குளிரை அவற்றால் தாங்க முடியவில்லை. உங்களிடம் போர்வை வேண்டும் என்று கேட்டு அழுகின்றன மன்னா.
ராஜா : அப்படியா! உடனடியாக ஒவ்வொரு நரிக்கும் போர்வை கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யுங்கள்.
மந்திரி : உத்தரவு மன்னா.
ராஜா : சரி, நரி பாசை உங்களுக்கு எப்படிப் புரிகிறது?
மந்திரி : எனக்கு விலங்குகளின் மொழி தெரியும் மன்னா.
ராஜா : அடடா! இப்படிப்பட்ட மந்திரி கிடைப்பது நான் செய்த புண்ணியம். எப்போதும் என்னை விட்டுப் பிரியக் கூடாது.
மந்திரி : நீங்கள் சொர்க்கம் சென்றாலும் வருவேன் மன்னா.
காட்சி 2
(மறுவாரம் மீண்டும் நகர் உலா கிளம்பினர். அப்போதும் நரிகள் ஊளையிட்டன.)
ராஜா : வரதா, போர்வை கொடுத்தும் ஏன் நரிகள் ஊளையிடுகின்றன?
மந்திரி : மன்னா, அவை தங்களுக்கு நன்றி தெரிவிக்கின்றன.
ராஜா : ஓ, அப்படியா!
(அப்போது கொழுத்த பன்றி ஒன்று அந்தப் பக்கமாகச் சென்றது. இதுவரை ராஜா பன்றியைப் பார்த்ததில்லை).
ராஜா : இது.... இது என்ன புது விலங்கு?
மந்திரி : மன்னா, தங்கள் பட்டத்து யானை தான் இப்படி மெலிந்து விட்டது!
ராஜா : என்னது, பட்டத்து யானையா? மெலியக் காரணம் என்ன?
மந்திரி : யானைக்குக் கொடுக்கும் பணத்தை எல்லாம் யானைப் பாகன் சுருட்டி விடுகிறார் மன்னா.
ராஜா : அவரை முதலில் வேலையை விட்டு அனுப்புங்கள். நல்ல ஆளை வேலைக்கு அமர்த்துங்கள்.
மந்திரி : உத்தரவு மன்னா.
காட்சி 3
(அடுத்த மாதம் ராஜாவும் மந்திரியும் மகிழ்ச்சியாக நகர்வலம் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு பன்றி ஓடியது).
ராஜா : புதுப்பாகனை நியமித்தும் யானை ஏன் இன்னும் மெலிந்திருக்கிறது அமைச்சரே?
மந்திரி : மன்னிக்கவும் மன்னா. அது யானை இல்லை எலி. சமையல்காரரின் கவனக்குறைவால் உங்களுக்குச் சேர வேண்டிய சத்தான உணவெல்லாம் இந்த எலிக்குப் போய்ச் சேர்ந்து விட்டது.
ராஜா : என்னது, மன்னரின் உணவை எலிக்குக் கொடுப்பதா? இன்று இரவே சமையற்காரரின் உயிரை எடுக்கிறேன். உடனே கைது செய்யுங்கள்.
மந்திரி : அப்படியே ஆகட்டும் மன்னா!
காட்சி 4
(தன் சொல் கேளாத சமையல்காரருக்குத் தந்திரமாகத் தண்டனை வாங்கிக் கொடுத்து, தன் பழியைத் தீர்த்துக் கொண்டார் மந்திரி. சமையல்காரரின் மகனோ தன் தந்தையைக் காப்பாற்ற மந்திரியிடம் ஓடிவந்தான்).
ச.மகன் : மந்திரியாரே மந்திரியாரே, நீங்கள் தான் என் தந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும்.
மந்திரி : அரசர் கட்டளை என்னால் ஒன்றுமே செய்ய இயலாது.
ச.மகன் : நீங்கள் அப்படிச் சொல்லக்கூடாது. உங்களால் முடியாதது எதுவும் இல்லை.
மந்திரி : உன் தந்தையைக் காப்பாற்றுவதால் எனக்கென்ன பலன்?
ச.மகன் : எங்கள் சொத்தில் பாதியை உங்களுக்குத் தருகிறோம். எப்படியாவது காப்பாற்றுங்கள்.
மந்திரி : சொன்ன சொல் தவற மாட்டாயே?
ச.மகன் : நிச்சயமாகத் தருகிறேன்.
மந்திரி : சரி போ. நான் காப்பாற்றுகிறேன்.
ச.மகன் : நன்றி மந்திரியாரே! நன்றி
காட்சி 5
(நள்ளிரவு சமையல்காரருக்குத் தண்டனை நிறைவேற்றுவதற்காக அவை கூடியிருந்தது. மந்திரி அவசரமாக ஓடிவந்தார்).
மந்திரி : மன்னா, ஒரு விசயம் சொல்ல மறந்துவிட்டேன்.
ராஜா : என்ன மந்திரியாரே?
மந்திரி : இன்று நள்ளிரவு உயிர் இழப்பவர் நேரே சொர்க்கத்துக்குச் செல்வார். இப்போது தண்டனை அளித்தால், அது தண்டனை அல்ல. வெகுமதி. எனவே அவரை விட்டுவிடுங்கள்.
ராஜா : அப்படியா! உங்களுக்கு எப்படித் தெரியும் மந்திரியாரே?
மந்திரி : அதுதான் என் மதியூகம்.
ராஜா : அடடா! நீங்கள் எனக்கு மந்திரியாகக் கிடைத்தது நான் செய்த பாக்கியம். எப்போதும் என்னை விட்டுப் பிரியக்கூடாது.
மந்திரி : நீங்கள் சொர்க்கம் சென்றாலும் உடன் வருவேன் மன்னா.
ராஜா : உண்மையாகவா?
மந்திரி : ஆமாம் மன்னா.
ராஜா : நன்றி. இன்று உயிர் பிரிந்தால் நேரே சொர்க்கம் என்றீரே, நாம் இருவரும் உயிர் துறக்கலாமா மந்திரியாரே?
மந்திரி : என்ன சொல்கிறீர்கள் மன்னா?
ராஜா : நீர் தானே சொன்னீர், இன்று நள்ளிரவில் இறப்பவர் நேரே சொர்க்கத்திற்குச் செல்வார் என்று.
மந்திரி : ஆம் மன்னா.
ராஜா : அப்படியென்றால் இப்போது நாம் இருவரும் சொர்க்கத்திற்குச் சென்று விடுவோம்.
(மந்திரிக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. பயத்தில் உடல் நடுங்கியது).
மந்திரி : மன்னா, நான் சட்டை மாற்றிக் கொண்டு வந்துவிடுகிறேன்.
ராஜா : சட்டையெல்லாம் சொர்க்கத்தில் மாற்றிக் கொள்ளலாம். நேரமாகிவிட்டது.
மந்திரி : என் மனைவியிடம் சொல்லி விட்டு வந்து விடுகிறேன் மன்னா!
(அவையை விட்டுச் சென்ற மந்திரி, உயிரைக் கையில் பிடித்தபடி நாட்டை விட்டே ஓடிவிட்டார்).