காய்கள் கட்டிய வெருளி
தரம் 4 பாடம் 7.1
காய்கள் கட்டிய வெருளி
கந்தன் செய்த தோட்டத்தில்
காய்கறிகள் அதிகமாம்
வந்து மாடு, ஆடுகள்
வளர்ந்த வற்றைக் கடிக்குமாம்.
காய்கள் ஒன்று கூடின.
காக்க வெருளி கட்டின.
வாய்கள் திறந்து பேசின.
வழி வகுத்துக் கொண்டன.
சாம்பல் நீற்றுப் பூசணி
தலைக்கு வருவேன் என்றது.
பாம்பு போன்ற புடலங்காய்
பக்கக் கைகள் ஆயின.
பானை போன்ற பூசணி
பருத்த வயிறு என்றது.
ஆனை மிளகாய்களும்
அழகு மூக்காய் ஆயின.
வெண்டிக்காய்கள் தாங்கள் தாம்
விரல்கள் என்று சொல்லின.
நொண்டிக் கால்கள் ஆயின
நுனி வளர்ந்த கரும்புகள்.
கனிந்த நிறத் தக்காளி
கன்னம் என்று நின்றது.
நனைந்த பயிற்றங் காய்களும்
நாலு மயிராயின.
கண்ணில்லாத வெருளி என்று
காய்கள் கவலை கொண்டன
அண்ணன் நாவற் பழவனார்
அதற்கு வந்து குந்தினார்.
முறுக்கு மீசை இல்லை யென்று
முணுமுணுத்துக் கொள்ளவே
நறுக்கி வைத்த அறுகம்புல்
நான் இருப்பேன் என்றது.
மாடு வந்து பார்த்தது
மனிதன் மீசை கண்டது
நாடு, காடு தாண்டியே
நாலு காலிற் பாய்ந்தது.
- பண்டிதர் க.சச்சிதானந்தம் -