தாத்தாவுக்கு ஒரு கடிதம்
தரம் 4 பாடம் 8.1

தாத்தாவுக்கு ஒரு கடிதம்
க.பொற்கொடி,
இல 32, பிரதான வீதி,
கொழும்பு 12,
02. 02. 2019.
அன்புள்ள தாத்தாவுக்கு,
வீட்டில் நாங்கள் அனைவரும் சுகமாக இருக்கிறோம். நீங்களும் பாட்டியும் சுகமாக இருக்க இறைவனை வேண்டுகின்றேன். மேலும், நீங்கள் அனுப்பியிருந்த விளையாட்டுப் பொருட்கள் கிடைத்தன. அவை மிகவும் அழகானவை. நான் அவற்றை எனது நண்பர்களுக்குக் காட்டி மகிழ்ந்தேன்.
இம்முறை விடுமுறைக்கு நாங்கள் அங்கே வருகின்றோம். உங்களுக்கும் பாட்டிக்கும் புத்தாடை வாங்கியிருக்கிறோம். உங்களுக்கு வேறு என்ன வேண்டும்? விரிவாக எழுதுங்கள் கொண்டுவருகின்றோம்.
பாட்டி! முழங்கால் வலி எப்படி இருக்கிறது? நேரத்துக்குச் சாப்பிடுங்கள். நன்றாக ஓய்வெடுங்கள். அத்துடன், தாத்தா சென்றமுறை நான் நட்டு வைத்த மரம் வளர்ந்திருக்கிறதா? இம்முறையும் அங்கு வந்து நண்பர்களுடன் குளத்துக்குச் சென்று நீராடுவோம். மீன்பிடித்து விளையாடுவோம். நாங்கள் அங்கு வருவதற்கும், உங்களைக் காண்பதற்கும் மிகவும் ஆவலாக இருக்கின்றோம்.
இப்படிக்கு
உங்கள் அன்புள்ள பேத்தி,
க.பொற்கொடி.