பழமொழிகள்
தரம் 4 பாடம் 9:1
பழமொழிகள்
பாடசாலை விடுமுறையில் சிறுவர்கள் தமது கிராமத்திற்குச் சென்றார்கள். அங்கு குளங்கள், ஆறுகள், வயல்வெளிகள், மரஞ்செடிகள் முதலியன காணப்பட்டன. சிறுவர்கள் அவற்றைப் பார்த்து இரசித்தபடி சென்று கொண்டிருந்தார்கள். அப்பொழுது வயலிலே வேலை செய்து கொண்டிருந்த மாமாவைக் கண்டார்கள்.
மாமா : ( சிறுவர்களைப் பார்த்து ) பட்டணத்துப் பட்டாம் பூச்சிகள் ஏன் இந்த வயல்வெளிப் பக்கம் வந்திருக்கிறீர்கள்?
தீனா : வயல்வெளியைக் கண்டு இரசிக்க வந்தோம் மாமா. எருதுகளை வைத்து என்ன செய்கிறீர்கள்?
மாமா : நிலத்தில் பயிரிடுவதற்காக எருதுகள் கொண்டு உழுகிறேன்.
பாவி : ஏன் மாமா! நிலத்தை உழுதல் வேண்டும்?
மாமா : அதுவா? “சீரைத்தேடின் ஏரைத்தேடு” என்பார்களே! பயிரிடுவதற்கு முன் மண்ணை ஆழமாகப் பண்படுத்த வேண்டும். அதனால் தான் “அகல உழுவதை விட ஆழ உழுவதே நன்று” என்பார்கள். இதன் மூலம் நிலத்தைப் பண்படுத்தி பயிர்களின் விளைச்சலையும் அதிகரிக்க முடியும். இதை நீங்கள் அறிந்ததில்லையா?
தீனா : அறிந்திருக்கிறேன் மாமா. வருடத்தின் எல்லா காலத்திலும் பயிர் செய்வீர்களா?
மாமா : “ஆடிப்பாட்டம் தேடி விதை, பருவத்தே பயிர் செய்” என்னும் பழமொழிகளுக்கேற்ப உரிய காலத்தே பயிர் செய்து பயன் கண்டனர் நம் முன்னோர்கள்.
பாவி : எல்லா விதைகளையும் விதைக்கலாமா மாமா?
மாமா : இல்லை, நல்ல தரமான விதைகளைத் தெரிவு செய்து விதைக்க வேண்டும். “காய்ந்த விதைக்குப் பழுதில்லை” என்பார்கள் நம் முன்னோர்கள். “அடர விதைத்து சிதறப் பிடுங்க வேண்டும்” என்றும் கூறுவார்கள்.
பாவி : நீரைப் பெற என்ன செய்வீர்கள் மாமா ?
மாமா : வாய்க்காலின் வழியே குளத்து நீரை வயல்களுக்குப் பாய்ச்சுவோம்.
தீனா : மழை நீரையும் பயன்படுத்தலாம் தானே, மாமா!
மாமா : நிச்சயமாக! மழை நீரையும் பயன்படுத்தலாம். நீர்வளம் குறைந்த நிலத்தை “வானம் பார்த்த பூமி” என விவசாயிகள் கூறுவர். அந்த நிலத்தில் மழை நீரை மட்டும் நம்பியே விவசாயம் செய்கிறார்கள்.
பவி : மாமா! நெல்லுடன் சேர்ந்து களைகள் வளர்வதில்லையா?
மாமா : நிச்சயமாக! பயிர்கள் வளரும் போது அதனிடையே வேண்டாத களைகளும் வளரும். அவற்றை வேருடன் களைதல் வேண்டும். இல்லையெனில், அவை பயிர்களுக்கு ஊறு விளைவிக்கும், எனவேதான், “களையை முளையிலேயே கிள்ளு” எனக் கூறியதோடு “களை பிடுங்காத பயிர் காற்பயிர்” எனவும் கூறினர்.
தீனா : மாமா! ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பழமொழி சொன்னீர்கள்! உரம் இடுவதற்கு ஏதேனும் பழமொழி இருக்கிறதா?
மாமா : ஆம், இயற்கை உரமே சூழல் நேயமானது. அதனால் தான், நம் முன்னோர்கள் ஆட்டுப் புழுக்கை, மாட்டுச் சாணம் போன்றவற்றைப் பயன்படுத்தினார்கள்.
தீனா : மாமா! உளவுத் தொழில் மிகவும் கடினமானதா?
மாமா : விரும்பி எதைச் செய்தாலும் அது கடினமாகாது. உழவன் சேற்றில் காலை வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும். “உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை” என்பது முன்னோர் வாக்கு.
பாவி : பயிர்களைப் பாதுகாக்க வேண்டும் தானே, மாமா?
மாமா : ஆமாம்! பயிர்களைப் பூச்சிகள் தாக்காமலும் கால்நடைகள் மேய்ந்து சேதப்படுத்தாமலும் பாதுகாத்தல் வேண்டும். இதனையே “கேட்காத கடனும் பார்க்காத பயிரும் பாழ்” என்பர் நம் முன்னோர்.
இருவரும் : ஆமாம்! நாங்கள் இன்று நிறைய விடயங்களை அறிந்து கொண்டோம். உங்களுக்கு மிகவும் நன்றி ! போய் வருகிறோம், மாமா.