இயற்கையின் பரிசு வானவில்
தரம் 4 பாடம் 10:1

இயற்கையின் பரிசு வானவில்
மழைத் துளிகளினூடாக சூரிய ஒளிக்கதிர்கள் செல்லும் போது முழு அக எதிரொளிப்பு நடைபெறுவதனால் ஒளி பிரிகையடைந்து ஏழு நிறங்கள் வானத்தில் தெரிகின்றன. இது மழைக்காலங்களில் வானத்தில் வண்ணமாகத் தோன்றுகிறது. இதுவே வானவில் என்று அழைக்கப்படும். இது தோன்ற, மழை மட்டும் காரணம் இல்லை. பனி மூட்டம், காற்றில் மிதக்கும் கண்ணுக்குப் புலப்படாத தூசு, காற்றில் நிறைந்திருக்கும் நீர்த்துளிகள் போன்றவையும் முக்கியக் காரணமாகத் திகழ்கிறன.
மழைக்காலத்தில் மேகங்களில் உள்ள நீர்த்துளிகளில் சூரிய ஒளி ஊடுருவும். அந்த ஒளி சிதறலடைந்து, நீர்த்துளிகளின் பின்புறமாக எதிரொளிப்பதால் வானவில் தோன்றுகிறது. இதை 'நிறப்பிரிகை' விளைவு என்றும் கூறுகின்றோம்.
நமது கண்களுக்குத் தெரிவது போல வானவில் உண்மையில் அரை வட்டமாக இருக்காது. முழு வட்ட வடிவில் தான் வானவில் தோன்றும். வளி மண்டலத்தின் மேற்பகுதியில் இருக்கும் அரை வட்டத்தை மட்டுமே நம்மால் பார்க்க முடிகிறது. குறிப்பிட்ட சில கோணங்களிலிருந்து மட்டுமே வானவில்லைக் காணமுடியும். அதனால் தான் நாம் பார்க்கின்ற வானவில்லை, வேறு ஊரில் இருக்கின்ற நண்பர்களால் பார்க்க முடிவதில்லை. ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், செம்மஞ்சள் , சிவப்பு ஆகிய ஏழு நிறங்களை வானவில் எதிரொளிக்கிறது. பொதுவாகக் காலை மற்றும் மாலை நேரங்களில் வானவில் தோன்றுகிறது. வானவில் சூரியனுக்கு எதிர் திசையில் தோன்றும். மழைத்துளி ஓரிடத்தில் இருக்கும் போது அதனைக் காண்பவருக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட கோணமானது 40 டிகிரி முதல் 42 டிகிரி வரை இருந்தால் வானவில்லைத் தெளிவாகப் பார்க்கலாம்.
வெப்பமண்டலங்களில் நீர்நிலைகளின் அருகில் வானவில்லை அடிக்கடி காணலாம். சூரிய குடும்பத்தில் புவியில் மட்டுமே வானவில்லானது தோன்றுகிறது. கிரேக்க நாகரிகத்தில் வானவில்லானது சொர்க்கத்திற்கும், பூமிக்கும் இடையிலான பாலமாகக் கருதப்பட்டது. சேர்பியாவில் வானவில்லானது மழைக்கடவுளின் வில்லாகக் குறிப்பிடப்படுகிறது.