கொடைக்குணமும் பரிவுணர்வும்
தரம் 4 பாடம் 12:1
கொடைக்குணமும் பரிவுணர்வும்
(“கர்ண மகாராசாவின் கொடைத்திறனைப் பற்றிய பல வாய்மொழிப் புராணக் கதைகள் உள்ளன. அத்தகைய கதைகளில் ஒன்றை இப்போது உங்களுக்குக் கூறப்போகிறேன்” என்று ,தாத்தா கதையைக் கூறத் தொடங்கினார். கதையைக் கேட்க ஆயத்தமான குழந்தைகள் தாத்தாவைச் சுற்றி ஆர்வத்துடன் அமர்ந்தனர்.)
பிள்ளைகளே! கர்ண மகாராசா “அங்கதேசத்தை” ஆளும் ஒரு சிற்றரசர். அவரின் புகழ் எங்கும் பரவிக் கொண்டிருந்தது. துரியோதன சக்கரவர்த்தியே கர்ணனுக்கு அங்கதேசத்தை நன்கொடையாகக் கொடுத்தார்.
ஒரு நாள் அமைச்சர் ஒருவர் துரியோதனனிடம் உரையாடிக் கொண்டிருக்கும் போது, “மகா பிரபுவே! நீங்கள் தான் இந்த நாட்டின் சக்கரவர்த்தி! தங்களிடம் அனைத்து அதிகாரங்களும் செல்வங்களும் உள்ளன. ஆனால், உங்களுக்கில்லாத புகழ் கர்ணனுக்கு இருக்கின்றதே. அது எப்படி நியாயமாகும்?” என்று மன்னனைப் பார்த்துக் குதர்க்கமாக வினவினார்.
அமைச்சரின் கூற்று துரியோதனனைச் சிந்திக்கத் தூண்டியது. எனவே துரியோதனன் அமைச்சரிடம், “நானும் கர்ணனைப் போல் புகழ் பெற யோசனை ஒன்று கூறுங்கள்” என்று கேட்டார். “மகா பிரபுவே! நாளை முதல் தாங்களும் கர்ணனைப் போல் கேட்பவர்களுக்கு இல்லை என்று கூறாது கொடுக்கத் தொடங்கி விடுங்கள். உங்களுக்குக் ‘கொடை வள்ளல்’ என்ற புகழ் கிடைத்துவிடும்” என்று ஆலோசனை கூறினார் அமைச்சர்.
துரியோதனன், “சரி, அப்படியே நடக்கட்டும்” என்றார். மறுநாள் ‘துரியோதனச் சக்கரவர்த்தி கொடை வழங்குவார்’ என்று அமைச்சர் அறிவித்தார். அந்த அறிவிப்பைக் கேள்விப்பட்ட கண்ணன் முதியவர் போல தன் உருவத்தை மாற்றிக் கொண்டுத் துரியோதனனிடம் வந்து “ ஐயா, எனக்கு ஒரு பொருள் தானமாக வேண்டும்” என்று கேட்டார். “பெரியவரே! உமக்கு என்ன பொருள் வேண்டும்? கேளும்! தருகிறேன்” என்றார் துரியோதனன். அதற்கு அந்தப் பெரியவர் “இன்னும் ஒரு மாதத்தின் பின் நான் விரும்பும் பொருளைக் கேட்டுப் பெற்றுக் கொள்கிறேன் அப்போது தாருங்கள்” என்றார். “அப்படியே செய்கின்றேன்” என்று வாக்குக் கொடுத்தார் துரியோதனன்.
வாக்குறுதியைப் பெற்றுச் சென்ற கண்ணன், அன்று மாலையே மழைக் கடவுளை அழைத்து “நாளை முதல் ஒரு மாதத்திற்கு அடை மழை பெய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். அன்று முதல் ஒரு மாதமாகத் துரியோதனனின் நாடெங்கும் அடை மழை பெய்தது. கண்ணன் ஒரு மாதத்தின் பின் முதியவர் போல் வேடமிட்டுத் துரியோதனனைக் காண்பதற்காக வந்தார். துரியோதனன் அந்த முதியவரைப் பார்த்து, “மழையில் நனைந்தவாறு வந்திருக்கும் நீங்கள் யார்?” என்று கேட்டார்.
துரியோதனன், ஒரு மாதத்திற்கு முன்னர் கொடுத்த வாக்கை, அம்முதியவர் நினைவூட்டினார். “அதற்கென்ன இப்போது? என்ன வேண்டுமோ கேட்டுப் பெற்றுக் கொண்டு செல்லுங்கள்” என்று அலட்சியமாகப் பதிலளித்தார் துரியோதனன்.
முதியவர், “மகாபிரபுவே! என் மகளின் திருமண நிகழ்விற்கு அடுப்பெரிக்க ஒரு வண்டி காய்ந்த விறகுகள் வேண்டும்” என்றார்.
துரியோதனன் சினத்துடன் முதியவரைப் பார்த்து “உமக்குப் பைத்தியம் பிடித்து விட்டதா? நாங்கள் அரண்மைனைப் பயன்பாட்டிற்கே விறகுகள் இல்லாமல் அல்லற் படுகின்றோம். இந்த நேரத்தில் நீர் காய்ந்த விறகுகள் கேட்கின்றீரே! பொன், பொருள் என்றால் தருகிறேன். விறகு தருவதற்கு என்னால் முடியாது” என்று கூறி அவ்விடத்தைவிட்டு முதியவரை வெளியேற்றினார்.
முதியவர் அங்கிருந்து புறப்பட்டு நேரே கர்ண மகாராசாவின் அரண்மனைக்குச் சென்றார்.
முதியவர் ஒருவர் தனக்கு முன்னால் மழையில் நனைந்து கொண்டு நிற்பதைப் பார்த்த கர்ண மகாராசா, முதலில் முதியவர் உடுத்திக் கொள்ள மாற்று உடையும் தலையைத் துவட்டிக் கொள்ளத் துண்டும் கொடுக்குமாறு உத்தரவிட்டார்.
முதியவர் அதன்படியே உலர்ந்த ஆடைகளை உடுத்திக் கொண்டார். அவருக்குப் பருகுவதற்குச் சூடான பாலும் வழங்கப்பட்டது. களைப்பு நீங்கிய பெரியவர், ஐயா கர்ண மகாராசாவே! என் மகளின் திருமணம் நாளை நடைபெற உள்ளது. சமையல் செய்ய ஒரு வண்டி நிறையக் காய்ந்த விறகுகள் வேண்டும்” என்றார்.
கர்ண மகாராசா, தன் அரண்மனைப் பணியாளர்களை அழைத்து, “நம் நாட்டுக் காட்டில் பாழடைந்த அரண்மனை ஒன்று உள்ளது. அந்த அரண்மனையில் மரத்தாலான தூண்களும் உத்திரங்களும் நிறைய உள்ளன. அவை மழையில் நனையாமல் காய்ந்த நிலையில் இருக்கும். நீங்கள் ஒரு வண்டி நிறைய அவற்றை ஏற்றி, அவை நனையாதபடி வண்டியில் கூரை வேய்ந்து பெரியவரின் ஊருக்கு அனுப்பி வையுங்கள்” என்று ஆணையிட்டார்.
கர்ண மகாராசா சொன்னபடியே பணியாளர்கள் தூண்களையும் உத்திரங்களையும் பெயர்த்து எடுத்தனர். ஒரு வண்டியில் அவற்றை ஏற்றி, அவை நனையாமல் இருப்பதற்குப் பனை ஓலையால் கூரையும் வேய்ந்தனர். பின்னர், அவ்வண்டியைத் துரியோதனனின் அரண்மனை இருக்கும் தெருவழியே ஓட்டிச் சென்றனர்.
இதனைக் கண்ட அமைச்சர் முதியவரிடம், “பெரியவரே, காய்ந்த விறகுகள் கிடைத்து விட்டது. போலிருக்கிறதே” என்று கேட்டார். “ஆமாம்! கர்ண மகாராசா தான் கொடுத்தார்” என்றார் முதியவர்.
அமைச்சருக்கு இப்போதுதான், கொடை வழங்குவதற்குச் செல்வம் மட்டும் இருந்தால் போதாது; கொடைக்குணமும் பரிவும் வேண்டும் என்னும் உண்மை புரிந்தது. இந்த உண்மையைத் துரியோதனச் சக்கரவர்த்திக்கு விளக்குவதற்கு அமைச்சர் விரைந்து சென்றார்.