சுவாமி விபுலானந்தர்
தரம் 5 பாடம் 2:1

சுவாமி விபுலானந்தர்
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் காரைதீவு என்னும் ஊரில் 1892 ஆம் ஆண்டு, பங்குனி மாதம், 27 ஆம் திகதி சாமித்தம்பி மற்றும் கண்ணம்மா தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். சுவாமி விபுலானந்தரின் இயற்பெயர் மயில்வாகனன் ஆகும். கிழக்கிலங்கையில் பிறந்து தமிழ் மொழி வளர்ச்சிக்கு இவர் பெரும் தொண்டாற்றியுள்ளார். இலக்கியம், சமயம், தத்துவ ஞானம், அறிவியல் மற்றும் இசை முதலிய பல துறைகளில் கற்றுத் தேர்ந்தவராகக் காணப்பட்டார்.
இவர் தனது ஆரம்பக் கல்வியை கல்முனை மெதடிஸ்த ஆங்கிலப் பாடசாலையிலும், மட்டக்களப்புப் புனித மைக்கல் கல்லூரியிலும் கற்றார். அவர் தான் ஆசிரியராகப் பணிபுரிந்த காலத்தில், புனித மைக்கல் கல்லூரியில் ஆசிரியராகச் சிலகாலம் பணி புரிந்து, அதன் பின் கொழும்பில் உள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு விரிவுரையாளராக இருந்த தென்கோவை கந்தையாப்பிள்ளையிடம் பண்டையத் தமிழ் இலக்கியத்தைக் கற்றார். அத்துடன் மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய தேர்வில் பங்கேற்று பண்டிதர் பட்டத்தையும் பெற்றார். இலங்கையிலிருந்து இப்பட்டத்தை முதன் முதலில் பெற்றவர் சுவாமி விபுலானந்தரே.
கொழும்பு அரசினர் தொழிநுட்பக் கல்லூரியில் இரசாயன உதவி விரிவுரையாளராகப் பணியாற்றினார். மயில்வாகனனாரின் விரிவுரைகள் மாணவர் மத்தியில் பெரும் சிறப்பைத் தேடிக் கொடுத்தன. அதனால் 1917ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரிக்கு விஞ்ஞான ஆசிரியராக விரும்பி அவரை அழைத்தனர். அதனை பெருவிருப்புடன் ஏற்றுக் கொண்டார். பின்பு மானிப்பாய் இந்துக் கல்லூரியின் அதிபரானார்.
திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில், 1925ம் ஆண்டிலிருந்து முகாமையாளராகக் கடமையாற்றிய சுவாமி விபுலானந்தர் அவர்கள் கல்லூரியின் வளர்ச்சியில் தனது செறிவான கவனத்தைச் செலுத்தும் பொருட்டு 1928ல் அதிபர் பதவியையும் ஏற்றுக் கொண்டார்.
ஆசிரியப் பதவியைத் துறந்து 1922 ஆம் ஆண்டில் ராமகிருஷ்ண மிஷனில் இணைந்து சென்னை சென்றார். இராமகிருஷ்ன மிஷன் நடத்திய ஸ்ரீராமகிருஷ்ன விஜயம் என்ற தமிழ்ச் சஞ்சிகைக்கும், வேதாந்த கேசரி என்ற ஆங்கில சஞ்சிகைக்கும் ஆசிரியராகயிருந்து பல அரிய கட்டுரைகளை எழுதினார். மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய பண்டித பரீட்சையின் பரீட்சார்த்தகராகவும் நியமிக்கப்பட்டார். தமிழ்ச்சங்க வெளியீடான “செந்தமிழ்” எனும் சஞ்சிகையில் இலக்கியக் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வந்தார். ஷேக்ஸ்பியரின் நாடகங்களை அடிப்படையாகக் கொண்டு அவர் பல திறனாய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டார். இக்கட்டுரைகள், 'மதங்க சூளாமணி' என்ற தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.
1924ஆம் ஆண்டு சித்திரை மாதம் பௌர்ணமி தினத்தில் சுவாமி சிவானந்தரால் சுவாமி விபுலானந்தர் என்ற துறவறப்பெயர் வழங்கப்பட்டது. அதன் பின்னர், அவர் இலங்கை திரும்பி, இராமகிருஷ்ண மிஷன் மேற்கொள்ளும் கல்விப் பணிகளை ஒருங்கமைத்தார்.
யாழ்நூல் அரங்கேற்றத்துக்குப் பின்னர் உடல் பாதிக்கப்பட்ட நிலையில் நாடு திரும்பினார். 1947 ஆம் ஆண்டு ஆடித்திங்கள் 19ஆம் திகதி சனிக்கிழமை சுவாமி விபுலானந்தர் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார். அவரது உடல், அவர் உருவாக்கிய மட்டக்களப்புச் சிவானந்த வித்தியாலயத்தின் முன்னாலுள்ள மரத்தின் கீழ் அமைக்கப்பட்ட கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. ஈழத்து மக்களுக்கு இவர் ஆற்றிய சேவையினைப் பாராட்டி இலங்கையரசு தேசிய வீரர் வரிசையில் ஒருவராக இவரைச் சேர்த்துள்ளது. இத்துடன் நாட்டில் உள்ள பாடசாலைகளிடையே கொண்டாடப்படும் அகில இலங்கை தமிழ் மொழி தினம் இவரது மறைவு தினமான அன்றே கொண்டாடப்படுகின்றது.