நன்றி மறவேல்
தரம் 5 பாடம் 4:1
நன்றி மறவேல்
நன்று என்ற சொல்லின் அடிப்படையில் நன்றி என்ற சொல் பிறக்கிறது. அதாவது ஒருவர் ஒருவருடைய வாழ்க்கையின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உதவி செய்ததை மறத்தல் கூடாது. நன்றை அல்லது நல்லதை மறவாதிருக்கும் பண்பினைக் குறிக்கும் சொல் நன்றி என்பதாகும். இந்தப் பரந்த உலகத்தில் மானுடம் ஒருவருக்கு ஒருவர் கலகம் செய்து அழிந்து கொண்டே வருவதோடு அழிந்தும் இருக்கிறது.
இத்தகு உலகில் ஒருவர் பிறிதொருவருக்கு நன்மை செய்வது என்பதே வளர்ந்த மனிதரின் நிலை. இங்ஙனம் ஒருவர் செய்த நன்மையை மறக்காது பாராட்டினால் மேலும் பல நன்மைகளைச் செய்ய அவர் முன்வருவார். நாடும் வளரும். அதோடு நன்மையை அடைந்த ஒருவர் அந்த நன்மையை மறவாதிருத்தலே அவர் அந்த நன்மையின் பயனை அறிந்திருக்கிறார் என்று உணரப் பெறும். இங்ஙனம் அத்தன்மையை அறிந்துணரும் நிலையில் தான் நன்மை வளரும். பலரும் பயன் பெறுவர்.
ஒருவர் செய்த நன்மையை மறந்து விட்டால் அவருக்கு யாரும் நன்மை செய்ய முன்வர மாட்டார்கள். அதனால் அவர் தம் வாழ்வில் தேக்கம் ஏற்படும், துன்பங்களும் துயரங்களும் தோன்றி அல்லற்படுவர், அழிந்து போவார். அதனால் “நன்றி மறப்பது நன்றன்று” என்கிறது திருக்குறள். நன்மையை மறவாதிருத்தலே நன்மையை நிலையாகப் பாதுகாக்கவும் மேலும் நன்மைகளைப் பெறவும் வழிவகுக்கும்.
ஒருவர் செய்த தீமையை மறவாமல் நினைவில் வைத்திருப்பதால் தீமை செய்தார் மீது கோபங்கள் அதிகம் ஏற்படும். அவருக்குத் தீமை செய்ய வேண்டும் என்ற முனைப்பு தோன்றும். தீமை செய்தவருக்குத் தீமை செய்ய நேரிடும். தீமையை அடைந்தவர் நாம் செய்த தீமைக்குத்தானே தீமை என்று நினைக்க மாட்டார். மீண்டும் முறுகி எழும் சினத்துடன் தீமை செய்வார். அதனால் தீமையே சுழன்று கொண்டு வரும். முடிவில் அழிவே நேரிடும். அதனால் “நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று."