பரதன்

தரம் 5 பாடம் 5:1

 

பரதன்

தசரத மன்னன் கோசல நாட்டை ஆண்டு வந்தான். இவனது நாட்டின் தலைநகர் அயோத்தி ஆகும். தசரத மன்னனுக்குக் கோசலை, கைகேயி, சுமித்திரை எனும் மூன்று மனைவியர் இருந்தனர். இவன் தனக்கு நீண்ட காலமாகக் குழந்தைச் செல்வம் இல்லாததால் மிகவும் வருத்த முற்றான்.

தசரதன் தனது குருவான வசிட்ட முனிவரின் ஆலோசனைப்படி புத்திரப் பேற்றை விரும்பி யாகம் செய்தான். அதன் பயனாகக் கோசலை இராமனைப் பெற்றாள். கைகேயி பரதனைப் பெற்றாள். சுமித்திரை இலக்குமணனையும், சத்துருக்கனையும் பெற்றாள். பிள்ளைகள் நால்வரும் கல்வியிலும் வில் வித்தையில் சிறந்து விளங்கினர்.

ஆண்டுகள் பல கழிந்தன. தசரதன் தன்னுடைய மூத்த மகனான இராமனுக்கு முடி சூட்ட விரும்பினான். அவ்வாறே நல்ல நாளில் முடி சூட்டுவதற்கு முடிவு செய்தான்.

கூனி என்பவள் இராமனுக்கு முடி சூட்டு வைபவம் நடைபெறப் போவதை அறிந்தாள். கூனியின் இயற்பெயர் மந்தரை என்பதாகும். இராமன் சிறுவனாக இருந்த போது அவளின் கூனல் முதுகில் விளையாட்டாக வில்லுண்டையால் அடித்தான். அதனால் அவள் இராமன் மேல் வெறுப்புக் கொண்டிருந்தாள். எனவே முடிசூட்டு வைபவத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு முடிவு செய்தாள்.

கூனி கைகேயியிடம் இராமன் முடிசூடப் போகும் செய்தியைக் கூறினாள். அதனை அறிந்த கைகேயி மகிழ்ச்சி அடைந்தாள். ஆனால் கூனி கைகேயியின் தூய மனதை மாற்றி அரசன் அவளுக்கு முன்பு கொடுத்திருந்த வரங்களைக் கேட்குமாறு வற்புறுத்தினாள். இராமன் பதினான்கு ஆண்டுகள் காடாள வேண்டும் என்பது ஒரு வரம், கைகேயியின் மகன் பரதன் நாடாள வேண்டும் என்பது மற்றைய வரம், மனம் மாறிய கைகேயி இரு வரங்களையும் விடாப்பிடியாகத் தசரதனிடமிருந்து பெற்றுக் கொண்டாள்.

இதன் காரணமாக இராமன் காட்டிற்குச் சென்றான். அவனை என்றும் விட்டகலாத தம்பி இலக்குமணனும் சீதையும் கூடவே சென்றனர். இராமனது பிரிவுத் துயர் தாங்க முடியாது உயிர் நீத்தார் தசரத மன்னன்.

பாட்டன் வீட்டிலிருந்து வந்த பரதன் தந்தையைக் காணாது வருந்தினான். கைகேயி அவனுக்கு அங்கு நடந்தவற்றைக் கூறினாள். பரதன் எல்லாவற்றையும் தாயிடமிருந்து அறிந்து வேதனைப்பட்டான்.

தனது தாயின் சூழ்ச்சியினாலேயே யாவும் நடந்தன என்பதை அறிந்து பரதன் கோபமும் வேதனையும் அடைந்தான். தன் தாயைப் பார்த்து என்ன காரியம் செய்து விட்டாய்? நான் இந்த இராட்சியத்தை எவ்வாறு ஏற்றுக் கொள்வேன்? அருமைத் தந்தையும், அண்ணனையும் இழந்து விட்ட பிறகு எனக்கு இராட்சியம் என்ன வேண்டியிருக்கிறது? இது என்ன கொடுமை? அண்ணன் இருக்க தம்பி அரசாள்வதா? இதோ காட்டுக்குச் சென்று அண்ணனை எப்படியாவது அழைத்து வருவேன். அவனுக்கே முடி சூட்டுவேன் என்றான். பரதன் அவ்வாறு கூறியதும் கைகேயி மனமுடைந்து போனாள்.

பரதன் கோசலையிடம் சென்றான். அவளுடைய பாதங்களில்  விழுந்து வணங்கினான். கோசலையின் கால்களை பிடித்துக் கொண்டு “தாயே, எனக்கு இங்கு நடந்த சூழ்ச்சி பற்றி ஏதும் தெரியாது. என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்” என வேண்டினான்.

பரதனது தூய உள்ளதை அறிந்த கோசலை அவனுக்கு ஆறுதல் கூறி ஆசீர்வதித்து அனுப்பினாள். தசரதன் இறந்த பதினான்காம் நாள் மந்திரிகள் முதலியோர் அரச சபையைக் கூட்டினார்கள். அச் சபையில் பரதன்  நான் காட்டிற்குச் சென்று அண்ணனை அழைத்து வந்து முடி சூடுவேன் என உறுதியாகக் கூறினான். பரதன் கூறியதைக் கேட்டு சபையிலே கூடியிருந்தவர்கள் எல்லோரும் பெரும் மகிழ்ச்சி அடைந்து ஆரவாரம் செய்தார்கள்.

பரதன் பரிவாரத்துடன் இராமன் இருந்த வனம் நோக்கிப் புறப்பட்டான். பரதன் வருவதை அவதானித்த இலக்குமணன் கோபமடைந்து, இராமனைப் பார்த்து “அண்ணா, இராச்சியத்தை பெற்றதோடு நிற்காமல் பரதன் எம்மை எதிர்க்கவும் படையோடு வருகிறான். அறநெறியில் இருந்து விலகிய இவனை கொல்வதில் என்ன பாவம்?” எனக்கோபித்து உரைத்தான்.

அவன் கூறியதை கேட்ட இராமன், “இலக்குமணா நான் சொல்வதைக் கவனித்துக்கேள். பரதன் இப்போது இங்கே ஏன் வருகின்றான் என்பதை நான் அறிவேன். அவன் எள்ளவும் தருமம் தவறாதவன் நீ அவனை பற்றித் தவறாகப் பேசாதே. சற்று பொறுத்திருந்து பார்” எனக் கூறினான். இவ்வாறு இராமனின் வார்த்தைகளைக் கேட்ட இலக்குமணன் சாந்த மடைந்தான்.

பரதன் இராமன் இருந்த இடத்தை அடைந்தான். இராமனைக் கண்டதும் கண்களில் நீர் பெருக அண்ணா! என கதறிய வண்ணம் இராமனில் காலடியில் விழுந்தான். அதன் பின்னர் அவனால் பேசவே முடியவில்லை. விம்மி விம்மி அழுதான். இலக்குமணனும் பரதனைத் தவறாக எண்ணியமைக்காக வருந்தினான்.

இராமன், பரதனை வாரியணைத்து "தம்பியே! அருமைத் தந்தையை தனியே விட்டுவிட்டு நீ இங்கே வரலாமா?" என்று கேட்டான். துக்கத்தினால் பரதனுக்கு உடனடியாகப் பதில் கூற முடியவில்லை சிறிது நேரம் கழித்துத் தன்னை சமாளித்துக் கொண்டு “அண்ணா! உன்னுடைய பிரிவைத் தாங்காமல் தந்தையும் உயிர் நீத்தார்” என்று விம்மலுடன் கூறினான். தந்தை இறந்தார் என்ற செய்தியை கேட்டதும் இராமன் அடியற்ற மரம் போல் விழுந்தான். சிறிது நேரத்தின் பின் மயக்கம் நீங்கி எழுந்தான். சகோதரர்கள் ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறினார்கள். பின்னர் பரதன் இராமனைப் பார்த்து அண்ணா அயோத்தி மக்கள் நீயின்றி வாடுகின்றார்கள். மீண்டும் அயோத்திக்கு வந்து ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். எனக் கூறி காலில் விழுந்து வணங்கினான்.

பரதனை வாரியெடுத்த ராமன் பின்வருமாறு கூறினான். “அப்பனே நாம் நல்ல முறையில் வளர்க்கப்பட்டோம். நீயும் நாமும் ஒருநாளும் தவறு செய்ய மாட்டோம். உன்னிடத்தில் சிறிதேனும் நான் குற்றம் காணவில்லை. “வனம்போ” என்று தந்தை சொன்னதை நான் மறப்பது தகுமா? உனக்கு இராச்சியப் பொறுப்பைத் தந்தார். எனக்கு வனவாசம் தந்தார். நம்மிருவரது வாழ்க்கையையும் வகுத்துக் கொடுத்து விட்டு உயிர் நீத்தார். அதை நாம் புறக்கணிக்கலாகாது. தகப்பனின் ஆணையை நிறைவேற்ற வேண்டும். எனப் பலவாறு அறிவுரை கூறினான். 

அண்ணனின் சொல்லைத் தட்ட விரும்பாத பரதன் ஒருவாறாக அயோத்தியை ஆழ்வதற்கு ஒத்துக் கொண்டான். “அண்ணா, நீயே என் தந்தை, என் தெய்வம். நீ சொல்லுகிற படியே செய்கிறேன். உன் பாதுகைகளை எனக்குத் தந்தருள வேண்டும். உனக்குப் பதிலாக அவற்றை சிம்மாசனத்தில் வைத்துப் பதினான்கு ஆண்டுகள் ஆட்சி செய்வேன். அதன் பின்னர் வந்து நீ ஆட்சியை ஏற்றுக் கொள்ள வேண்டும். என்று வேண்டி நின்றான். “அப்படியே ஆகட்டும்” என்ற இராமன் தனது பாதுகைகளை அன்புடன் பரதனிடம் எடுத்துக் கொடுத்தான். பரதனும் வணங்கி அவற்றைப் பெற்றுத் தலைமேல் வைத்துக் கொண்டு தன் பரிவாரங்களுடன் அயோத்தியை நோக்கித் திரும்பினான்.