சுற்றுச் சூழலைப் பாதுகாப்போம்

தரம் 5 பாடம் 6:1

 

சுற்றுச் சூழலைப் பாதுகாப்போம்

“ஆரோக்கியமாக நோய்களின்றி வாழ்வதற்கு நிலம், நீர் மற்றும் காற்று போன்ற சுற்றுச் சூழல் சுகாதாரமாக இருக்க வேண்டியது அவசியம், தற்போதைய நிலையில் சுற்றுச்சூழல் பெரிய அளவு மாசுபட்டு வருகிறது. இந்தச் சுற்றுச்சூழல் மாசுக்களைக் கட்டுப்படுத்த இனியும் தவறினால் இன்னும் பல்வேறு மோசமான நோய்களைச் சந்திக்க நேரிடும்’’ என்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் பொதுவான கருத்தாகும்.


1972-ம் ஆண்டில் நிலம், நீர் மற்றும் காற்று என்பவற்றின் மாசுபாடுகளால் மனித உடல் நலனுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் ஒரு விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன் பிறகு தான் ஒவ்வொரு நாட்டினரும் இது போன்ற சுகாதாரப் பிரச்னைகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் இருக்கும் தொடர்பு குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு அதனடிப்படையில் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தத் தொடங்கினர்.

நிலத்துக்கு மேலுள்ள பலவகையான நீர் ஆதாரங்கள் மற்றும் நிலத்தடி நீர் போன்றவற்றின் மூலமாகக் குடிநீர், பிற அத்தியாவசியத் தேவைகள் மற்றும் விவசாயத்துக்கான தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு கிடைக்கக்கூடிய நீரானது இயற்கையான முறைகளில் மாசடைவது மிகவும் குறைவு. ஆனால், மனித செயற்பாடுகளால் ஏற்படும் செயற்கை மாசுபாடுகளால் தான் மிகவும் அதிகமாக மாசடைகிறது.

தொழில்மயமாதல் மற்றும் நவீனமயமாதல், நகர்மயமாதல் போன்ற காரணங்களால் பல்வேறு நச்சுக்கழிவுகள் நீர்நிலைகளில் கலந்து தண்ணீரை மாசுபடுத்துகிறது. இதுபோன்ற பல்வேறு கழிவுகள் மழை நீரில் கரைந்து நீராதாரங்களில் கலப்பதாலும் நீர்மாசு ஏற்படுகிறது.

இந்த நீர் மாசுபாட்டால் வாந்தி, வயிற்றுப்போக்கு, போலியோ, கொலோரா, அமீபியாசிஸ், குடல் புழுக்கள் நோய் மற்றும் எலிக்காய்ச்சல் போன்ற நோய்கள் உண்டாகிறது.

 
இதே போல் காற்று மாசு படும் போது சுவாசம் தொடர்பான கோளாறுகள் ஏற்படுகிறது. காற்று மாசு மற்றும் பருவநிலை மாற்றம் ஆகிய இரண்டும் தற்போது மனித சமுதாயத்துக்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. 2010 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தின் படி, காற்று மாசுபாடானது அளவுக்கு அதிகமாக இருப்பதால் குறைப் பிரசவம் ஏற்பட காரணமாகிறது. இந்தியாவில் காற்று மாசுபாடால் ஆண்டுக்கு 10 லட்சத்துக்கு மேற்பட்டவர்களும், சராசரியாக நிமிடத்துக்கு 2 பேரும் பலியாகின்றனர் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்று மாசுபாட்டால், சுவாச மண்டல பாதிப்பு, ஆஸ்துமா, மூச்சுத்திணறல், மூச்சிளைப்பு, நுரையீரல் சார்ந்த புற்று நோய்கள், மன அழுத்தம், இதயப் படபடப்பு, கண் எரிச்சல், கண் பார்வை மங்கல் மற்றும் பார்வை இழப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. மேலும், மைய நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு, தலை சுற்றல், தலைவலி, மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற பாதிப்புக்களும் ஏற்பட வாய்ப்புள்ளது.

நிலம், நீர் மற்றும் காற்று போன்ற அனைத்து வகையான சுற்றுச்சூழல் மாசுகளையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மேற்கொள்ளும் ஆக்கப்பூர்வமான பணிகளுக்குப் பொது மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அதனால், இனிவரும் நம் சந்ததிகள் இந்த பூமியில் நோய்களின்றி, சுகாதாரமாக நலத்துடன் வாழ இன்று முதல் நம் வீடுகளிலிருந்தே அந்த மாற்றத்தைத் தொடங்க வேண்டும்.