உணவுத்திருவிழா

தரம் 5 பாடம் 9:1

 

உணவுத்திருவிழா

பசுமை நகர் குடியிருப்பு அன்று விழாக்கோலம் பூண்டிருந்தது. அக்குடியிருப்பில் ஆண்டு தோறும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழாவைத் தேர்வு செய்வர். இந்த ஆண்டு உணவு திருவிழா செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

சித்திரா தனது நண்பர்களான பவித்திரா, அகிலன் ஆகியோரை தன் இல்லத்திற்கு அழைத்திருந்தாள். விழா நாளன்று, குறித்த நேரத்திற்கு முன்னரே அவர்கள் இருவரும் வந்து விட்டனர். சித்திரா அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று அழைத்துச் சென்றாள்.

 

சித்திரா - பவித்திரா, அகிலன் நீங்கள் இருவரும் வந்ததில் மிக்க மகிழ்ச்சி. வாருங்கள் கண்காட்சி அரங்குகளைக் காண்போம்.

 

பவித்திரா – எங்களுக்கும் மகிழ்ச்சி, இதோ பாருங்கள் நமக்குக் கிடைக்கும் சத்துக்கள் அவற்றின் மருத்துவப் பயன்கள் பற்றி தெளிவாக விளக்கப் பலகைகள் வைத்திருக்கிறார்கள்.

 

சித்திரா– தேனும் தினைமாவும் இதுவரை கேள்விப் பட்டிருக்கின்றேனே தவிர சாப்பிட்டது இல்லை. தினை, வரகு, சாமை, குதிரை வாலி முதலிய அரிசி வகைகளில் நார்ச்சத்தும், உயிர்ச்சத்தும், தாது உப்புக்களும் மிகுதியாம். இவை தான் நம் மக்கள் தலைமுறை தலைமுறையாய் உண்டு வரும் உணவாம்.

 

அகிலன்  – கோதுமை மாவு, அரிசி மாவு தோசை தான் இதுவரை சாப்பிட்டிருக்கின்றோம். இங்கேயோ கம்பந்தோசை, கேழ்வரகுத் தோசை, சோளத் தோசை, முடக்கத்தான் தோசை எனப் பலவிதமான தோசைகள். பார்த்ததுமே சுவைக்கத் தூண்டுகின்றனவே. கம்பந்தோசை மட்டுமல்ல கம்பங்கூள் களி, கம்புமாவு உருண்டை எனப் பலவகை உணவுகள் வைக்கப்பட்டுள்ளன.

 

சித்திரா – ஆம் அகிலன். இவை, சுவைக்க மட்டுமன்றி சீரான உடல் நலத்திற்கும் தேவை, நாம் இப்போதெல்லாம் இவற்றை வீட்டில் ஆக்குவதனையே மறந்து விட்டோம்.

 

பவித்திரா – சோள மாவில் மட்டும் எத்தனை உணவு வகைகள் பாரேன்! சோளச்சோறு, சோளம்பிட்டு, சோளமாவு, உப்புமாவு எல்லாம் சுடச்சுடத் தருகிறார்கள். சோளத்தில் உயிர்ச்சத்து “ஏ” மிகுதியாம். சோள உணவில் புரதச்சத்து மிகுந்துள்ளதால் உடல் வளர்ச்சிக்கான ஆற்றலைத் தருகிறதாம்.

 

அகிலன் -  கேழ்வரகுப் பலகாரங்களின் பெயர்களைக் கேட்டதுமே ஆசையாக உள்ளது. கேழ்வரகுக் கூழ், களி, கஞ்சி, அடை, வடை, அதிரசம் எல்லாம் சுவையும் பயனும் மிக்கவை. உடலுக்குத் தேவையான கல்சியச் சத்துமிக்க உணவு கேழ்வரகு.

 

சித்திரா – ஆவி மூலம் வேக வைக்கப்படும் உணவுகளில் தான் எத்தனை வகைகள் பாருங்கள்? எத்தனை வண்ணங்கள்? எத்தனை வடிவங்கள்? சிவப்பரிசிப்பிட்டு, கொழுக்கட்டை, இடியப்பம், வெண்பிட்டு, வேக வைத்த சீனிக்கிழங்கு, பனங்கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு இவையெல்லாம் புரதச்சத்து மிக்கவை. நோய் எதிர்ப்புசக்தியையும் அதிகரிக்கின்றன.

 

அகிலன் – பக்கத்து அரங்கிலே பாருங்கள். சுண்டல் மணம் நம்மைச் சுண்டி இழுக்கிறதே! புரதச்சத்து மிக்க உடல் வளர்ச்சிக்கு உதவுகிற முளைகட்டிய பாசிப்பயறு, நவதானியச் சுண்டல், கொண்டைக்கடலை, தட்டைப்பயறு, மொச்சை எனப் பயறு வகைகளில் பக்குவமான தீன் பொருட்கள் வழங்குகின்றனர். வாருங்கள், ஒவ்வொரு கை அள்ளிச் சாப்பிடுங்கள். 

 

பவித்திரா – இதோ, கீரை வகைகளின் பிரிவு. கீரை வகைகளும், கீரைத்தோசைகளும் மணக்கின்றன. கீரைகளில் இருப்புச் சத்தும், தாது உப்புக்களும் மிகுதியாக உள்ளன. தெளிவான கண்பார்வைக்குக் கீரைகள் உதவுகின்றன. இரத்தத்தில் சிவப்பணுக்கள் உருவாகவும் இவை உதவுகின்றன.

 

சித்திரா – இதோ பார் அகிலா! உன்னை மாதிரி உடம்பு இளைத்தவர்களுக்கு “எள்ளு” ஏற்ற உணவு என எழுதியிருக்கிறார்கள். எள்ளுணவு கொழுப்புச் சத்துத் தரவல்லது. குடற்புண்களை ஆற்றவும் கூடியது.  எள்ளுருண்டை, எள்ளுமாவு, எள்ளுப்பொடி என வகைவகையான உணவுகள் இருக்கின்றன.

 

அகிலன் – சித்திரா இந்த உணவுத்திருவிழா அரங்கில் சுற்றிச் சுற்றிக் கால்கள் ஓய்ந்து விட்டன. கொஞ்சம் சூடாக ஏதாவது குடித்தால் நன்றாக இருக்கும்.

 

சித்திரா – இதோ இந்த அரங்குக்குப் போகலாம். வா! நாம் மறந்தே போய் விட்ட இயற்கையான நீரும் சாறும் இருக்கின்றன. சூடான சுக்குநீர், குளிர்ந்த பதநீர், நினைவாற்றல் தரும் வல்லாரைச் சாறு, குளிர்ச்சி தரும் பனங்கற்கண்டுச் சாறு, மஞ்சக்காமாலை நோய் தீர்க்கும் கீழ்காய் நெல்லிச்சாறு, அறுகம்புல்ச் சாறு, இளநீர் இவற்றுள் என்ன வேண்டுமோ? அதனைப் பருகுங்கள்.

 

அகிலன் – அருமையான கேழ்வரகுக் கஞ்சி! சூடான சுவையானச் சுக்கு நீர்! அடடா எத்தனை எத்தனை உணவு வகைகள் சித்திரா அரிய உணவுத் திருவிழாவுக்கு எங்களை அழைத்ததற்கு மிகவும் நன்றி.

 

சித்திரா – நீங்கள் இருவரும் இங்கே வந்ததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி, நன்றி, இனிமேல் இத்தகைய இயற்கையான, சத்தான உணவு வகைகளையே உண்ணப் பழகுவோம். உடல் நலம் காப்போம்.