ஒற்றுமையே பலம்

தரம் 5 பாடம் 10:1

 

ஒற்றுமையே பலம்

ஒரு நாள் மாலைப் பொழுது மலர்விழி விளையாட்டாய் தன் ஐந்து விரலிலும் முகங்களை வரைந்தாள். சிறிது நேரத்தில் அவை பேசத் தொடங்கின.

கையிலுள்ள ஐந்து விரல்களுக்குள் “யார் சிறந்தவர்” என்னும் போட்டி! நீயா? நானா? என்னும் கருத்தாடல். அது வாய்ச்சண்டையாக மாறியது. என் உதவியின்றிச் சின்னஞ்சிறு பொருளைக் கூட உங்களால் தூக்க முடியாது எனச் செருக்குடன் கூறியது கட்டை விரல். "சும்மா கிட! தற்பெருமை கொள்ளாதே. அவன், அவள், அது, இது எனச் சுட்டிக் காட்டுவது நான் தானே! எனவே நானே சிறந்தவன்" என்றது சுட்டு விரல்.

“சரி நாம் எல்லோரும் வரிசையாக நிற்போம். உயரமானவர் யார் எனப் பார்த்து விடலாம்” எனச் ‘சூளுரைத்தது’ நடுவிரல். “விலை உயர்ந்த மோதிரம் அணிவிப்பது யாருக்கு? எனக்குத்தான் என் பெயரே, ‘மோதிர விரல்’ உங்கள் நால்வரிலும் செல்வாக்கு மிக்கவன் நானே!” எனப்பெருமை பேசியது மோதிர விரல். “கைகூப்பி வணக்கம் சொல்லும் போது, முதலில் நிற்பவன் நான். எனக்குப் பின் தான், நீங்கள் எல்லோரும் எனவே நானே பெரியவன்” என்றது, சுண்டுவிரல்.

அப்போது, ‘செல்பேசி’ ஒலித்தது. “மலர்விழி................. அதனை எடுத்துவா!” என்றார் அம்மா. இதுவரை கருத்தாடல் செய்து கொண்டிருந்த ஐந்து விரல்களும் தங்களை மறந்து ஒன்று சேர்ந்தன. ஒன்றையொன்று பார்த்துக் கொண்டன.