காடையின் நுண்ணறிவு

தரம் 5 பாடம் 10:2

 

காடையின் நுண்ணறிவு

ஓர் அறுவடைக் காலம். நெல் வயலில் பயிர்கள் நன்கு வளர்ந்து கதிர்கள் முற்றியிருந்தன. அந்த வயலுக்குள், காடைப்பறவை ஒன்று கூடுகட்டித் தன் குஞ்சுகளுடன் வாழ்ந்து வந்தது. குஞ்சுகளுக்கு இன்னும் முழுமையாக இறகுகள் வளரவில்லை.

ஒரு நாள் தாய்ப்பறவை இரை தேடுவதற்காக வெளியில் சென்றிருந்தது. அப்போது, வயலின் சொந்தக்காரர் வயலைச் சுற்றிப் பார்த்தார். “கதிர்கள் நன்றாக முற்றி விட்டன“ எனத் தனக்குத் தானே கூறிக் கொண்டே சென்றார்.

அச்சமடைந்த குஞ்சுகள், தாய்ப்பறவை கூட்டுக்குத் திரும்பியவுடன் நடந்ததனைக் கூறின. தாய்ப்பறவை, “என் செல்வங்களே  கவலைப்படாதீர்கள்! அண்டை அயலார் ஒவ்வொருவரும் தங்கள் வேலைகளில் ஈடுபட்டிருப்பர். எனவே, நாளை வயலின் சொந்தக்காரர் அறுவடை செய்ய வரமாட்டார்; பொறுத்திருப்போம்” எனக் கூறியது.

மறுநாள் காலை வயலுக்கு வந்த வயலின் சொந்தக்காரர், “மிகவும் கவலையுடன், நாட்கள் தள்ளிப் போனால் நெல் வீணாகி விடுமே! சுற்றத்தாரைக் கொண்டாவது நாளையே அறுவடை செய்ய வேண்டும்" என நினைத்துக் கொண்டே சென்றார்.

மாலை, கூட்டுக்குத் திரும்பிய தாய்ப்பறவையிடம் குஞ்சுகள் மீண்டும் முறையிட்டன. அப்போதும் தாய்ப்பறவை, “என் கண்மணிகளே நாளையும் அவர் அறுவடை செய்யமாட்டார்; ஏனெலில், சுற்றத்தாருக்கும் நெல் வயல்கள் இருக்கும். அவர்கள் வருவதும் ஐயம் தான்; எனவே, பொறுத்திருப்போம்” எனக் கூறியது.

மறுநாள் காலை வயலுக்கு வந்த வயலின் சொந்தக்காரர், “இனி யாரையும் நம்பிப் பயனில்லை. நாளையே குடும்பத்தினருடன் வந்து அறுவடை செய்துவிட வேண்டியது தான்.” என எண்ணியவாறே சென்றார். மாலையில் வீட்டுக்குத் திரும்பிய தாய்ப்பறவை நடந்ததனை அறிந்தவுடன் “குழந்தைகளே நாம் உடனே பாதுகாப்பான வேறு ஓர் இடத்திற்குச் செல்ல வேண்டும் என” பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றது.