காகத்தின் சாமர்த்தியம்
தரம் 6 பாடம் 3:1.1
காகத்தின் சாமர்த்தியம்
ஓர் ஊரில் ஒரு உணவகம் இருந்தது. உணவகத்தின் பின்புறத்தில் சமையற்காரன் வடை சுட்டுக் கொண்டிருந்தான். காகம் ஒன்று அருகில் காத்திருந்தது. சமையற்காரன் விறகு எடுப்பதற்காக கீழே குனிந்தான். காகம் வடை ஒன்றைக் கொத்திக்கொண்டு பறந்தது. அவ்வேளை உணவக முதலாளியும் வந்தார்.
சமையற்காரனுக்கு ஏசினார். யாராவது பையன் திருடியிருந்தால் அவர் அப்பையனைப் பிடித்து அடித்திருப்பார். காகத்தை அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. காகம் ஒரு வேப்பமரக் கிளையில் உட்கார்ந்தது, மற்றைய காகங்களையும் அழைத்து விருந்து போட எண்ணியது.
அதற்கிடையில் நாய் ஒன்று ஓடிவந்து காகத்திற்கு கீழே உட்கார்ந்தது. அண்ணாந்து மேலே பார்த்து, நாவை நீட்டியது. அதிலிருந்து நீர் சொட்டியது. காகத்தை ஏமாற்றி வடையைப் பறிக்க எண்ணியது. “காகமே, காகமே, நீ அழகான காகம். குயில் குஞ்சைக் கூட நீ தான் அடைகாத்து குரல் சொல்லிக் கொடுப்பாயாம். ஒரு பாட்டுப் பாடுவாயா? கேட்க ஆர்வமாக இருக்கின்றது." என்று நாய் கூறியது.
காகம் உடனே வடையைக் கால் நகங்களுக்கிடையே வைத்து பிடித்துக் கொண்டது. “என் பாட்டி ஒருவர் நரியிடம் ஏமாந்த கதையை நானும் கேட்டிருக்கிறேன். அதே போல் எங்களையும் ஏமாற்றி விடலாம் என்று எண்ணி விடாதே. நான் பாடத்தான் போகின்றேன். உனக்காக அல்ல. என் இனத்தவர் அனைவரையும் அழைப்பதற்காக நாங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து இந்த வடையைப் பகிர்ந்து சாப்பிடுவோம். உன்னைப் போல உன் இனத்தவரையே வெறுக்கின்ற சாதியல்ல நாங்கள். இந்த வடை உனக்குக் கிடைத்தால் நீயே சாப்பிட்டுவிடுவாய். இன்னொரு நாய் வந்தால் இந்த வடையை விட்டுவிட்டு உன் சகோதரனையே கடிப்பாய். உன்னைப் பார்க்கவே வெட்கமாயிருக்கிறது, ஓடிவிடு”
காகம் சொல்லிக்கொண்டே எச்சமிட்டது. அது நாயின்மேல் விழுந்தது.
“கா...கா...கா...” என்று காகம் கத்தியது.
பல காகங்கள் எல்லாத் திசைகளிலிருந்தும் பறந்து வந்தன.
ஏமாற்றமடைந்த நாய் தலை குனிந்தபடி ஓடியது.