தங்கம் விதைத்தால் தங்கம் விளையுமா?

தரம் 6 பாடம் 4:1.1

 

தங்கம் விதைத்தால் தங்கம் விளையுமா?

எமது ஊரிலே செல்வந்தர்களும் ஏழைகளும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இவர்களுள் செல்வந்தர்களை எடுத்து நோக்கினால் சிலர் பிறரது துன்பங்களைத் துடைப்பவர்களாகவும், ஏழைகளுக்கு வரும் துன்பம் தனக்கு வந்த துன்பமாகக் கருதி உதவி செய்கிறவர்களாகவும் இருக்கின்றனர்.

ஆனால் இன்னும் சில செல்வந்தர்களோ ஏழைகளின் உழைப்பையும், அவர்களின் உடமைகளையும் ஏதோ ஒரு வழியில் தந்திரமாக அபகரிக்கக் கங்கணம் கட்டுகின்றனர். ஏழைகள் நடுத்தெருவில் நிற்பதற்காக மனதில் வஞ்சகத்தோடு “ஆடு நனைவதைப் பார்த்து ஓநாய் அழுவதைப்” போன்று வேடம் போடுகின்றனர். இவர்களின் பேராசைக்கு அளவேயில்லை. 
ஆனால் ஏழைகளாக இருப்போரை எடுத்துக்கொண்டால் தமது ஏழ்மையின் நிமித்தம் கூனிக்குறுகி, வார்த்தைச் சுருக்கம் மட்டுமின்றிச் சிரிப்புச் சுருக்கத்துடனேயே வாழ்கின்றனர்.

அன்றாட சீவியத்துக்காக அலைபவர்களாகவும், பிறரால் இலகுவில் ஏமாற்றப்படுபவர்களாகவும் காணப்படுகின்றனர். ஊதியத்துக்காக எத்தொழிலையும் செய்வதற்கும், தாம் விட்ட பிழைகளுக்குப் பிராயச்சித்தம் தேடுபவர்களாகவும், எதற்கும் இறைவனையே தஞ்சம் என வேண்டி நிற்பவர்களாகவும் காணப்படுகின்றனர். 


இவர்களது ஏழ்மைநிலை வசதி படைத்தவர்களின் நகைப்புக்கும், பழிக்கும் காரணமாகி விடுகின்றது. ஆனால் இவர்களிடம் மனப்பக்குவமும், அறிவாற்றலும், உள்ளத்தெளிவும் உண்டு. இதனால் இவர்கள் செல்வந்தர்களை விட நிம்மதியோடும், உள்ளத் தெளிவோடும் இருக்கவே செய்கின்றனர். 

 “பேராசை பெரு நட்டம்” 
“வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உள்ளான்”