வாக்கிய உறுப்புக்கள்

தரம் 6 பாடம் 4:4.1

 
வாக்கிய உறுப்புக்கள் 
1. எழுவாய் 
பயனிலையோடு திணை, பால், எண், இட உறவு கொண்டுள்ள பெயர்ச் சொல்லே எழுவாய் என்கிறோம்.
 
எடுத்துக்காட்டு 
1. அண்ணன் வந்தான்.
2. காகம் கரைந்தது.
3. தேனீக்கள் பறந்தன.
 
இங்கு எழுவாயைக் கண்டுபிடிப்பதற்கு யார், எது, எவை என்ற வினாக்களில் பொருத்தமான வினாவை வினவுகையில் கிடைக்கப்பெறும் விடை எழுவாயாகும்.
 
எடுத்துக்காட்டு 
1. யார் வந்தான்?
2. எது கரைந்தது?
3. எவை பறந்தன? 
என்ற கேள்விகளுக்கு விடையாக அமைவது
அண்ணன், காகம், தேனீக்கள் என்பனவாகும்.
 
எனவே இவைகளே மேலுள்ள வாக்கியங்களின் எழுவாய்கள் ஆகும்.
 
யார் என்பதற்குப் பதிலாக எவை? எது? என்ற வினாவையோ, எது? என்பதற்கு பதிலாக யார்? எவை? என்ற வினாவையோ, எவை? என்பதற்கு பதிலாக யார்? எது? என்பதையோ வினவ முடியாது.
 
2. பயனிலை 
ஒரு வாக்கியத்தின் கருத்து முற்றுப்பெறும் இடம் பயனிலை ஆகும்.
 
பயனிலை பெரும்பாலும் வினைச் சொற்களாகவே அமையும்.
*ரவி ஓடினான்.
 
பெயர்ச் சொற்களும் பயனிலையாக வருவதுண்டு
*பாரதியார் சிறந்த புலவர்.
 
மேலே கூறப்பட்ட வாக்கியங்களில் ரவி, பாரதியார் என்பன எழுவாய்களாகும். இவற்றின் கருத்தை முற்றுப்பெறச் செய்வது ஓடினான், புலவர் என்பவைகளாகும். எனவே ஓடினான், புலவர் என்பன பயனிலைகளாகும். 
 
3. செயற்படுபொருள்
ஒரு வாக்கியத்தில் வினைச் சொல்லின் செயற்பாட்டிற்கு உட்படும் பெயர்ச்சொல் செயற்படுபொருளாகும்.
*நான் சோறு சாப்பிட்டேன்.
இங்கு சாப்பிட்டேன் என்ற சொல் பயனிலை ஆகவும் வினைச்சொல் ஆகவும் அமைகிறது. இங்கு வினைச் சொல்லின் செயற்பாட்டில் உட்பட்டது சோறு என்பதால் அதனைச் செயற்படுபொருள் என்கிறோம்.
 
செயற்படுபொருளைக் கண்டுபிடிப்பதற்கு எதை என்ற வினாவை அவ்வாக்கியத்தின் பயனிலையோடு சேர்த்து வினவும் போது விடையாக வருவது செயற்படுபொருள் என இலகுவாக காணலாம்..
*தம்பி பட்டம் வரைந்தான்.
இங்கு எதை வரைந்தான்? என வினவும் போது பட்டம் என்பது விடையாக வருகிறது. எனவே பட்டம் செயற்படுபொருளாகும்.