வாக்கிய இயைபு
தரம் 6 பாடம் 5:1.1
வாக்கிய இயைபு.
வாக்கியங்களில் எழுவாயாக அமையும் பெயர்ச் சொல்லுக்கும், பயனிலையாக அமையும் வினைச் சொல்லுக்கும் இடையே திணை, பால், எண், இடம், காலம், என்ற இலக்கணக் கூறுகளின் அடிப்படையில் ஒரு தொடர்பு காணப்படுவதையே வாக்கிய இயைபு என்கிறோம்.
எழுவாய் பயனிலை இயைபுடன் எழுதுதல்
எடுத்துக்காட்டு,
கண்ணண் வந்தான்.
மாலதி வந்தாள்.
கிளி பறந்தது.
இங்கு எழுவாய், பயனிலை என்பவற்றுக்கிடையே இயைபான தொடர்பு காணப்படுவதைக் காணலாம். அதாவது வந்தான், வந்தாள், பறந்தது என்பவற்றுடன் கண்ணண், மாலதி, கிளி என்பன நேரடியாக இயைபு கொண்டுள்ளதை அவதானிக்கலாம்.
திணை, பால், எண், இடம், காலம் என்பன இயைபுபட எழுதுதல்
திணை
திணை இருவகைப்படும்
1. உயர்திணை 2. அஃறிணை
பொதுவாக மனிதரைச் சுட்டும் பெயர்கள் உயர்திணை என்றும் மனிதர் அல்லாத ஏனைய உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருள் அனைத்தையும் சுட்டும் பெயர்கள் அஃறிணை என்றும் வகைப்படுத்தப்படும்.
எடுத்துக்காட்டு,
கமலன் வந்தான் - உயர்திணை வாக்கியம்
குருவி பறந்தது – அஃறிணை வாக்கியம்
பால்
பெயர்ச்சொற்கள் பால் அடிப்படையில் ஐந்து வகைப்படும்.
1. ஆண்பால் - தம்பி - உயர்திணை – ஒருமை
2. பெண்பால் - அரசி - உயர்திணை – ஒருமை
3. பலர்பால் - புலவர்கள் – உயர்திணை – பன்மை
4. ஒன்றன்பால்- பசு - அஃறிணை - ஒருமை
5. பலவின்பால்- பசுக்கள் - அஃறிணை - பன்மை
எடுத்துக்காட்டு,
தம்பி எழுந்தான் - ஆண்பால் வாக்கியம்
அரசி வருகிறாள் - பெண்பால் வாக்கியம்
புலவர்கள் பாடுகின்றனர் – பலர்பால் வாக்கியம்
பசு கதறுகிறது - ஒன்றன்பால் வாக்கியம்
பசுக்கள் கதறுகின்றன - பலவின்பால் வாக்கியம்.
எண்
ஒருமை, பன்மை என்ற அடிப்படையில் பெயர்ச்சொற்களை வகைப்படுத்தல் எண் எனப்படும்.
ஒன்றைக்குறிக்கும் பெயர் ஒருமை.
ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் குறிப்பது பன்மை.
எடுத்துக்காட்டு,
1. பூ மலர்ந்தது – ஒருமை வாக்கியம்
2. நட்சத்திரங்கள் மின்னின – பன்மை வாக்கியம்
இடம்
தன்மை, முன்னிலை, படர்க்கைப் பெயர்கள் மூவிடப் பெயர்களாகும்.
தன்மை - பேசுவோனைச் சுட்டும் பெயர்
முன்னிலை – கேட்போனைச் சுட்டும் பெயர்
படர்க்கை - பேசப்படும் பொருளைச் சுட்டும் பெயர்
எடுத்துக்காட்டு,
நான் – வருகிறேன் - தன்மை ஒருமை
நாம், நாங்கள் – வருகிறோம் – தன்மைப் பன்மை
நீ – வருகிறாய் - முன்னிலை ஒருமை
நீங்கள் – வருகிறீர்கள் - முன்னிலைப் பன்மை
அவன் – வருகிறான் - படர்க்கை ஒருமை
அவர்கள் – வருகிறார்கள் - படர்க்கைப் பன்மை
அது – வருகிறது - படர்க்கை ஒருமை
அவை – வருகின்றன - படர்க்கைப் பன்மை
காலம்
ஒருவினை / செயல் நடைபெற்ற காலத்தை உணர்த்தப் பயன்படுவது காலம் ஆகும்.
காலம் மூன்று வகைப்படும்.
1. இறந்தகாலம் – செயல் நடைபெற்று முடிவடைந்தது.
2. நிகழ்காலம் - செயல் நடைபெற்றுக்கொண்டிருப்பது.
3. எதிர்காலம் - செயல் நடைபெற இருப்பது.