நிறுத்தற் குறியீடுகள்
தரம் 6 பாடம் 6:2.1

நிறுத்தற் குறியீடுகள்
எழுத்து மூலம் கருத்தை தெளிவாக தெரிவிப்பதற்கு துணையாக நிறுத்தற் குறிகள் பயன்படுகின்றன. பேசும் பொழுது ஒருவர் தமது குரலைத் தாழ்த்தியும், உயர்த்தியும், தாமதித்தும், நிறுத்தியும் கருத்துக்களை தெளிவாகப் புகட்ட முடியும். எழுத்தில் இத்தகைய தாக்கங்களை ஏற்படுத்துவதற்கு இந் நிறுத்தற் குறியீடுகள் துணை நிற்கின்றன.
சொற்களுக்கு இடையில் இடைவெளி இல்லாமலும் பந்தி பிரிக்காமலும் குறியீடுகள் இல்லாமலும் தொடர்ந்து எழுதப்பட்டிருக்கும் விடயங்களை வாசித்துக்கொண்டு செல்கையில் கண்கள் சலிப்படைந்து விடும்.
கண்களுக்கு ஆறுதல் தரவும் கருத்துற நோக்கவும் சொற்களுக்கிடையே இடைவெளிகளும் நிறுத்தற் குறியீடுகளும் தவிர்க்க முடியாது வேண்டப்படுகின்றன. எழுத்தைத் தொடங்க வேண்டிய இடத்தில் தொடங்கி முடித்தல், உறுப்பமைய எழுதுதல், எழுத்துக்களுக்கும் சொற்களுக்குமிடையில் ஏற்ற இடைவெளி விட்டு எழுதுதல், நிறுத்தற் குறியீடுகளை ஏற்ற இடத்தில் கையாளுதல் அவசியமாகும்.
பொருள் நன்கு புலப்படுத்துவதற்கு குறியீடுகள் உரியவாறு பயன்படுத்தப்பட வேண்டும்.
1. முற்றுப்புள்ளி ( . )
ஒரு வாக்கிய முடிவைக் காட்டுவது முற்றுப்புள்ளி ஆகும்.
குமார் படம் வரைந்தான்.
நான் வீட்டுக்குச் சென்றேன்.
2. காற்புள்ளி ( , )
சொற்களைத் தனித்தனியாகவோ, அடுக்கடுக்காகவோ பிரிக்கும் போது காற்புள்ளி இடல் வேண்டும்.
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்பன ஐம்பூதங்களாகும்.
முகவரி எழுதும் போதும் காற்புள்ளி பயன்படுத்தப்படுகின்றது.
திரு . ப. திவ்வியகுமார்,
32, மலபார் வீதி,
மட்டக்களப்பு.
3. வினாக்குறி ( ? )
ஒரு வாக்கியம் வினா வாக்கியமாக அமையும் போது அதற்கு இறுதியில் வினாக்குறி இடல் வேண்டும்.
இங்கே வந்தவர் யார்?
பூக்கள் அழகானவையா?
4. வியப்புக்குறி (! )
இதனை உணர்ச்சிக் குறி என்பர்.
தலைவா, வருக! வருக!
ஐயோ! பாவம்! இவன் நல்லவனாயிற்றே!
5. அடைப்புக்குறி ( )
அடைப்புக்குறிகள் எழுத்துப் பகுதியின் இடையே மேற்கோள்கள் அல்லது விளக்கத்தினை உண்டாக்குவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆங்கிலச் சொற்களைத் தமிழ் ஆக்கங்களுக்கிடையில் பயன்படுத்தும் போதும் அடைப்புக்குறிக்குள் பயன்படுத்த வேண்டும்.
முக்கனிகள் ( வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம் ) எங்கள் ஊரில் நிறைய உள்ளன.
6. மேற்கோட்குறி ( “.............” )
ஒருவர் கூறிய சொற்களை அல்லது கூற்றுக்களை அவர் கூறிய வாறே எடுத்தாளும் போது இரட்டை மேற்குறி இடப்படும்.
“ அறம் செய விரும்பு ” என்றார் ஒளவைப்பிராட்டியார்.
புறக்காற்று “ஊ....... ஊ...............” என இரைந்தது.