மூட ஆமை
தரம் 6 பாடம் 8:1.1
மூட ஆமை
குளம் ஒன்றில் ஆமையும்
கொக்கு இரண்டும் வாழ்ந்தன
குளத்தில் தண்ணீர் வற்றவே
கூடி மூன்றும் வருந்தின.
அண்டை ஊரில் உள்ளதோர்
அழகுக் குளத்தை நாடியே
இரண்டு கொக்கும் போகவே
எண்ணி முடிவு செய்தன.
அதனைக் கண்ட ஆமையும்
அழுதே “அண்ணன் மார்களே
இதனை விட்டுப்போகவே
எனக்கும் உதவி செய்யுங்கள்.
நன்மைக் கால முற்றிலும்
நட்புச் செய்து வாழ்ந்தவர்
துன்பம் கண்ட போதிலே
துறந்து போதல் இல்லையே!”
என்று கூறி வேண்டவே
இரண்டு கொக்கும் அதனிடம்
“நன்று நன்று தம்பியே!
நாங்கள் பறந்து செல்லுவோம்!
நீயும் வருவதெப்படி
நெடுந்தொலைவும் ஆனதே!
காயும் வெய்யில் கருகுமே
கால்கள் சோர்ந்து போகுமே”
என்று கூறிக் கொக்குகள்
இரண்டும் வருந்தி நாளெலாம்
ஒன்று கூடி ஆய்ந்தன!
உளவும் ஒன்று கண்டன!
“ஆமைத் தம்பி உன்னையே
அழைத்துப் போவ தென்னிலோ,
ஊமை போல் இக் குச்சிகளை
உன்றன் வாயால் பற்றிக் கொள்!
தரையில் வந்து வீழுவாய்
தவிடு பொடி ஆகுவாய்
மறந்திடாதே” என்றன.
“மறவேன்” என்ற(து) ஆமையே!
குச்சி ஒன்றைக் கொணர்ந்தன
கௌவிக் கொண்ட(து) ஆமையும்
உச்சி வானில் பறந்தன
ஊரார் நின்று பார்த்தனர்.
சிறுவர் கைகள் கொட்டியே
சிரித்துக்கூச்சல் போட்டனர்
துருதுருத்த ஆமையும்
தூக்கிச் செல்லும் நண்பரைக்
“கீழே இரைச்சல் ஏன்” எனக்
கேட்க வாயைத் திறந்ததும்
வீழ்ந்து நொறுங்கிப் போனதே
வீணில் உயிரைத் துறந்ததே!
மூத்தோர் சொல்லைக் கேட்டிடா
மூட ஆமை செத்ததே!
காத்துக் கொள்ளல் வேண்டுமே
கடமை, அடக்கம் இரண்டையே!
- பெருஞ்சித்திரனார் -