சுகாதாரக் கும்மி

தரம் 6 பாடம் 9:1.1

 

சுகாதாரக் கும்மி 


பாவையரே! எந்தன் பாங்கியரே! – கும்மி 
பாடி விளையாடும் தோழியரே!
ஆவலொடு சுக வாழ்வை அடைவதற்கு
ஆகும் வழிகளைத் தேடுவீரே

உள்ளம் உடலையே பற்றி நிற்கும் – இந்த
உண்மை மறந்திட லாகா தம்மா! 
தெள்ளத் தெளிவந்த அறிவுடை யோர் மொழி
தெய்வ மொழியென் ருணர்வாய், அம்மா! 

மாசோடறியாமை நேசமாகித் – தம்முள் 
வாய்த்த மணஞ்செயும் காரணத்தால் 
பேசும் உலகினில் நோய்கள் எனும்பல
பிள்ளைகள் வந்து பிறக்கு தம்மா! 

சுத்தமே என்றும் சுகம் அளிக்கும் – தீய 
சோம்பலை ஓட்டித் துரத்தும், அம்மா! 
இத்தரை வாழ்வைப் பெருக்கும், அம்மா – அதற்கு 
ஈடேதும் இல்லை  யான் சொன்னேன் அம்மா! 

ஏதும் அழுக்கிலா ஆகாயமே – உடற்கு 
என்றும் உறுதி பயக்கும், அம்மா! 
மோது கடற்கரை சென் றுலவி – உண்மை
முற்றும் தெளிவுறக் காண்பாய், அம்மா! 

கந்தையானாலும் கசக்கியுடு – என்னும் 
கற்பனை போற்றி நடப்பாய், அம்மா! 
சுந்தர மேனியுண்டாகும் அம்மா! – இந்தச் 
சுத்தத்தின் நன்மை சிறிதோ? அம்மா! 

வேலை செய் யாது சோம்போறிகளாய் – நிதம் 
வீட்டிலிருப்பது ஆகாதம்மா! 
மூலையிலிட்ட இரும்பு துருவேறி,
மோசமாய்ப் போவதும் கண்டிலையோ?

நோய்கள் உடலை அணுகிடாமல் – ஆயுள் 
நூறினும் மேலாய் வளரும் அம்மா! 
தீயஉணவை அகற்றும், அம்மா! – வேலை 
செய்திட நித்தம் பழகும் அம்மா! 

நித்தமும் நோயாளி யாகி,ஐயோ! – கட்டிலில் 
நீங்காது நீண்டு கிடப்பவர்க்கு 
எத்தனை செல்வம் இருந்திடினும் – அதில் 
யாதும் பயன் உண்டோ? சொல்லும், அம்மா! 

                                       - கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை -