செய்தித்தாள்கள்
தரம் 6 பாடம் 12:1.1
முன்னுரை
அறிவியலின் வளர்ச்சியினால் இன்று உலகமே சுருங்கியிருக்கின்றது. உலகத்தில் எங்கோ ஒரு மூலையில் நடைபெறுகின்ற நிகழ்ச்சியும் உடனுக்குடன் அனைத்துலகத்தவரும் அறிந்துகொள்ளும் வசதிகள் நிறைய ஏற்பட்டுள்ளன. வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள்கள் முதலியவை மூலம் செய்திகள் விரைந்து பரவுகின்றன. இந்தக் கட்டுரையில் செய்தி தாள்களின் தோற்றம், வளர்ச்சி, பயன்கள் முதலியவை குறித்து அறிவோம்.
தோற்றம்
ஆங்கிலத்தில் சொற்களைக் குறிக்க "நியூஸ்"(NEWS) என்ற சொல் உள்ளது. அந்தச் சொல்லில் உள்ள ஒவ்வோர் எழுத்தும் ஒவ்வொரு சொல்லை உணர்த்துவதாகக் கூறுவர். N என்பது வடக்கு (North), E என்பது கிழக்கு (East), W என்பது மேற்கு (West), S என்பது தெற்கு (South) என்று நான்கு திசைகளையும் குறிப்பதாகக் கூறுவர். உலகின் முக்கிய நான்கு திசைகளிலும் நடைபெறும் செய்திகளைத் தருவதால் (News Paper) செய்தித் தாள்கள் என்று காரணப் பெயர் வந்ததாகச் சொல்வர்.
உலகத்தின் முதல் செய்தித் தாள், கி.பி பதினாறாம் நூற்றாண்டில் இத்தாலி நாட்டில் தோன்றியது என்பர். கி.பி 1633 ஆம் ஆண்டில் இங்கிலாந்திலும் 1835 இல் இந்தியாவிலும் செய்தி இதழ்கள் வெளிவந்தன. இங்கிலாந்திலிருந்து வெளியான பொது அறிவுச் செய்தி இதழ் "பப்ளிக் இன்டெல்லிஜன்ஸ்" என்பதாகும். இந்தியாவில் அரசினர் "கெசட்" என்ற செய்தி இதழை வெளியிட்டனர். அதன் பின்னர் பல நாடுகளிலும் பற்பல செய்தி இதழ்கள் தோன்றின.
ஜெர்மனிய நாட்டை சேர்ந்த "ஜோன் கூட்டன்பேர்க்" என்ற அறிஞர் அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். காகிதம் செய்யும் முறை கண்டுபிடிக்கப்பட்டு அது பெரிதும் வளர்ச்சியுற்ற நிலையில் செய்தித் தாள்கள் ஆங்காங்கே சிறப்பாக வெளிவரலாயின.
ஆரம்ப காலங்களில் செய்திகளை மட்டுமே தெரிவித்து வந்த இதழ்கள், கால வளர்ச்சியில் பலதுறை அறிவுகளையும் மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் வெகுவாக வளர்சியடைந்தன. உலக நடப்புகளை அறிவிப்பதுதான் செய்திதாள்களின் முக்கிய குறிக்கோள் என்று இன்றளவும் கருதப்பட்டாலும் அறிவியல், இலக்கியம், அருங்கலைகள், ஆன்மிகம், விளையாட்டு, வேடிக்கை, பொழுதுபோக்கு என்று பல்துறைகளைப் பற்றியும் தாங்கிவரும் ஏடுகளாகச் செய்தித்தாள்கள் விரிவான நோக்கத்தைப் பெற்றுள்ளன. இன்றைய எல்லா நாட்டுச் செய்தித் தாள்களும் கட்டுரை, கவிதை, நாடகம், ஆராய்ச்சி என்று பல வடிவங்களுக்குரிய இலக்கியப் பணிகளைச் சிறப்பாக ஆற்றி வருகின்றன. சமயக் கருத்துக்களைச் சாற்றி இறை பக்தியையும், ஆன்மிக ஒருமைப்பாட்டையும் வளர்த்து வருகின்றன.
நாடகம், சினிமா, கேளிக்கை போன்றனவற்றைப் பற்றி விளக்கியும் விமர்சனம் செய்தும் மக்களுக்குப் பொழுது போக்கு அம்சங்களை அளித்து வருகின்றன. வீரம், விளையாட்டு, வெற்றி, சாதனை போன்ற விடயங்களைப் பற்றியும் மக்களுக்குச் செய்தித்தாள்கள் வெளியிட்டு வருகின்றன. செய்தித் தாள்களை படிப்பதன் மூலம் நம் நாடு தொடர்பான செய்திகளையும் வேறு பல நாட்டுச் செய்திகளையும் அறிய முடிவதால், படிப்பவரின் உலகியலறிவு நாளும் பெருகி வரும். இன்றைய நாளில் செய்தித்தாள் மக்களின் அன்றாடத் தேவைகளில் முக்கிய ஒன்றாகிவிட்டது. தாய் மொழியில் வெளியாகும் செய்தித்தாளோடு ஆங்கில செய்தித்தாளையும் வாங்கிப் படிக்கும் பழக்கம் பெரும்பாலாரிடம் உள்ளது. செய்தித்தாளை காசு கொடுத்து வாங்கிப் படிக்க வசதியில்லாதவர்கள் அக்கம்பக்கத்தில் இரவல் வாங்கியாவது படிக்கிறார்கள். மற்றும் சிலர் பக்கத்தில் உள்ள வாசிகசாலைக்குச் சென்று படித்துச் செய்திகளை அறிந்துகொள்கின்றார்கள். மொத்தத்தில் அன்றாடச் செய்திகளைப் படிக்கத் தவறிவிடுகின்ற நிலையில் அதை ஒரு பெரிய இழப்பாகவே கருதுகின்ற நிலைமை உருவாகியிருக்கின்றது.
செய்தித்தாளின் பயன்கள்,
உலகத்தில் ஒரு மூலையில் நடைபெறும் ஒரு சிறிய நிகழ்ச்சியை அடுத்த சில மணி நேரங்களுக்குள் செய்தித்தாள்கள் மூலமாக அகில உலகமும் அறிந்து கொள்ள முடிகிறது. செய்தித்தாள்கள், சினிமா, நாடகம், இசை போன்ற கலைகளின் வளர்சிக்கும் பெரும் பங்கு ஆற்றுகின்றன. பலவித கலைகளைப் பற்றிய விமர்சனங்களாலும் கலைகள் தரமான, ஆக்கபூர்வமான, வளர்ச்சி பெறுவதோடு கலைஞர்கள் முன்னேற்றமடையவும் முடிகின்றது. மொழி வளர்ச்சிக்கும் புதிய புதிய ஆராய்ச்சி உத்திகளுக்கும் கூடச் செய்தித்தாள்கள் பேருதவி புரிகின்றன என்று கூறலாம்.
பலநாட்டு அரசியல் முறைகளை அறிவதோடு, உலக அரசியலைப் பற்றிய ஒட்டுமொத்தமான அறிவையும் பெறுவதற்கு செய்தித்தாள்கள் பெருந்துணை புரிகின்றன. உலக அமைதிக்கும் அது உதவி புரிகின்றது.
சிந்தனையாளர்கள், அறிவியல் ஆராய்ச்சியாளர்கள், ஆன்மிகவாதிகள், அரசியல்வாதிகள் முதலானோரின் பேச்சுக்களும் எழுத்துக்களும் செய்திதாள்களில் வெளியிடப்படுகின்றன. அவற்றைப் படிப்பவர் பயனடையலாம். அரசாங்க அறிவிப்புகள், அறிக்கைகள், எச்சரிக்கைகள், விளம்பரங்கள், போன்றவற்றைப் பொதுமக்கள் செய்தித்தாள்களின் வாயிலாக அவ்வப்போது அறிந்துகொள்ள முடிகிறது.
பஞ்சம், வெள்ளம், விபத்து, போர் போன்றவை ஏற்படுகின்றபோது செய்தித்தாள்கள் அரசாங்கத்துக்கும் பொதுமக்களுக்கும் பாலமாக அமைந்து ஆவண செய்கின்றன. பொதுவாக செய்தித்தாள்களில் இடம்பெறும் வாசகர் குரல், மக்கள் மேடை, ஆசிரியருக்குக் கடிதம் போன்ற பகுதிகள் வாயிலாக, பொதுமக்கள் தங்கள் தேவைகளையும் குறைபாடுகளையும், கோரிக்கைகளையும் விமர்சனங்களையும் அரசாங்கத்திற்கு எடுத்துக்கூற முடிகின்றது. அரசாங்கமும் அதிகாரிகளும் செய்திதாள்களின் வாயிலாக வெளியாகும் மக்கள் குரலுக்கு மதிப்பளித்து, குறைகளைக்களையவும், நிவாரணப் பணிகளில் ஈடுபடவும், அரசியல் திட்டங்களைப் பற்றிய பொதுமக்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அறிய முடிகின்றது.
முடிவுரை
இவ்வாறு, மக்களுக்குப் பலதுறை அறிவினையூட்டும் ஆசானாகவும், பொதுமக்களுக்கும் அரசுக்கும் இடையே அமைந்த நல்லுறவுப் பாலமாகவும், காலத்தின் கண்ணாடியாகவும், விவாத மேடையாகவும் இன்னும் பலவாறெல்லாம் பணியாற்றிவரும் செய்தித் தாள்கள் கடமையுணர்வோடும் பொறுப்புணர்வோடும் பணியாற்றி நாட்டின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக விளங்குகின்றன. இத்தகு சிறப்புக்குரிய செய்தித் தாள்களின் வளர்ச்சிக்கு நாம் உதவ வேண்டும். செய்திகளைப் படித்து சீர்தூக்கிச் செயல்பட்டு வாழ்வில் செம்மை நிலை அடைவோமாக.
- எஸ். ஆர். கோவிந்தராசன் -