சேர். ஐசாக் நீயூட்டன்

தரம் 6 பாடம் 14:1.1

 

சேர். ஐசாக் நீயூட்டன்


இங்கிலாந்திலே "ஊல்ஸ்தோப்" என்னும் கிராமத்தில் அப்பிள் மரங்கள் நிறைந்த தோட்டமொன்று இருந்தது. அக்கிராமத்தில் வசித்த ஆங்கில இளைஞன் ஒருவன் ஒருநாள் அத்தோட்டத்தின் மரநிழலில் அமர்ந்து சிந்தனையில் மூழ்கியிருந்தான். அப்பொழுது அப்பிள் பழமொன்று அவனருகில் விழுந்தது. பழுத்த அப்பிள் பழங்கள் இவ்வாறு விழுவதை அவன் முன்னரும் பலமுறை பார்த்திருக்கிறான். ஆனால் இன்று அது அவனுடைய ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டியது. 

பழமும் ஏனைய பொருட்களும் கீழே நோக்கி விழுவதேன்? அவை மேலே நோக்கி ஏன் செல்லவில்லை? என்ற விசாரணை அவன் உள்ளத்தில் உதித்தது. அவ்விசாரணைக்கு விடை காண அவன் பல ஆராய்ச்சிகள் செய்தான். ஈற்றில், புவியீர்ப்பு அதற்குக் காரணமெனக் கண்டறிந்தான். அவனே ஐசாக் நியூட்டன் என்னும் விஞ்ஞானி. 

ஆயிரத்து அறுநூற்று நாற்பத்திரண்டாம் ஆண்டு நத்தார் தினத்தன்று நியூற்றன் பிறந்தார். நத்தார் தினப் பரிசாக அவர் உலகுக்குக்  கிடைத்தாரென்று அறிஞர்கள் பாராட்டுகின்றனர். அவர் தாயின் வயிற்றில் இருந்தபோதே அவரது தந்தை இறந்துவிட்டார். அதனால் அக்குடும்பம் வறுமையில்  வாடியது. தாயார் மறுமணம் செய்தபடியால், இரண்டாவது வயது முதல் நியூட்டன் தமது பாட்டியாருடனேயே  வாழ்ந்து வந்தார். 

இளமைப் பருவத்தில் நியூட்டன் காற்றாடி, நீர்க்கடிகாரம் போன்றவை செய்யும் முயற்சியிலே பெரும் பொழுதைக் கழித்தார். படம் வரைவதிலும் வாசிப்பதிலும் ஆர்வமுடையவராக இருந்தார். பதினான்காவது வயதில் நியூட்டன் மீண்டும் தாயாருடன் வாழச் சென்றார். விவசாயம் அவர்களது குடும்பத் தொழிலாகையால் அத்தொழிலை மகனுக்குப் பயிற்சியளிக்கவே தாய் விரும்பினார். ஆனால் நியூட்டனோ தோட்டத்தில் இருந்து வாசிப்பார், சிந்திப்பார் அல்லது  ஆக்கபூர்வமான விளையாட்டில் ஈடுபடுவார். ஈற்றில் அவரது ஆர்வத்தையும் ஆற்றலையும் கண்டு, கல்வி பயில்வதற்காக அவரைக் கேம்பிரிட்ஸ்  பல்கலைக்கழகத்திற் சேர்த்தனர். நியூட்டன் தனது இருபத்திரண்டாவது வயதிலே பட்டதாரியாகி, இருபத்தாறாவது வயதிலே கணிதப் பேராசிரியரானார். 

விஞ்ஞான வளர்ச்சிக்காக அவர் செய்த சேவைகள் பல. அவர் புவியீர்ப்புக் கொள்கையைக் கண்டறிந்து விளக்கினார். இருட்டறையினுட் சூரிய ஒளிக்கற்றையைச் சிறு துவாரம் வழியாகப் புக விட்டுப் பல பரிசோதனைகள் செய்தார். அவற்றால்,சூரிய ஒளியில் ஏழு நிறங்கள் உண்டு என்பதைக் காட்டினார். 

அவரது அரிய சேவைகளைப் பாராட்டும்முகமாக அவருக்கு சேர் என்ற பட்டம் வழங்கப்பட்டது. சிந்தனையில் மூழ்கித் தம்மையே மறந்திருப்பது நியூட்டனது இயல்பு, ஒருநாள் மெய் வருத்தம் பாராது, பசி நோக்காது, கண்துஞ்சாது தமது பணியில் அவர் ஈடுபட்டிருந்தார். அவரது உணவு  மேசையிலே உண்ணப்படாமல்  இருந்தது.  உணவை உண்ணாது அவர் கருமமே கண்ணாயிருந்தார். அங்கே வந்த நியூட்டனின் நண்பர் ஒருவர் குறும்பு செய்ய எண்ணி, உணவைத் தாமே உண்டு வெறும் பாத்திரங்களை விட்டுச் சென்றார். நெடுநேரங் கழித்து மிக்க பசியுடன் நியூட்டன் உணவை நாடி வந்தார். அங்கே உணவு இல்லை. வெறும் பாத்திரங்களே இருந்தன. அவற்றைப் பார்த்த அவர், நான் உணவு உண்ணவில்லை என்றல்லவா எண்ணினேன். நான் முன்னரே  உணவை அருந்திவிட்டேன் என்று கூறித் திரும்பிச் சென்றார். 

நியூட்டன் தற்பெருமை இல்லாதவர். தமது சாதனைகள் மிகமிக அற்பமானவை என்றே எண்ணினார். அதனால் தமக்கு முன் வாழ்ந்த விஞ்ஞானிகளை அவர் போற்றினார்.