புகழ்ச்சி இகழ்ச்சியை அளித்த கதை
தரம் 6 பாடம் 15:1.1
புகழ்ச்சி இகழ்ச்சியை அளித்த கதை
பெருங்குடி என்னும் ஊரில் மழவராயன் என்ற பெயருடைய ஒருவன் இருந்தான். அவன் அவ்வூரில் இருந்த பெரும்புலவர் ஒருவரிடம் திருக்குறள், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் முதலிய பல நூல்களைப் படித்துக் கொண்டான். அதனால் அவனுக்கு அறிவு ஓரளவு மிகுதிப்பட்டது. ஆயினும் பிற இலக்கியங்களையும் இலக்கணத்தையும் கற்காத படியால் ஊரார்கள் மழவராயனை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. அறிவு மிகுதிப்பட்டு அது பலருக்கும் பயன்படத்தக்க வகையில் பயன்பட்டு எல்லோராலும் நன்கு உணரப்பட்டால் மதிப்புத் தானே உண்டாகும். இந்த உண்மையை மழவராயன் உணர்ந்து கொள்ளவில்லை. அவன் என்ன இந்த ஊர் மக்கள் ஒன்றுந் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். நல்ல நூல்களைப் படித்த நம்மை எவரும் ஒரு பொருட்டாக மதிக்கவில்லையே என்று உள்ளம் புழுங்கினான்.
உள்ளம் புழுங்கிய மழவராயன் பேசாமல் இருக்கவில்லை. பலரிடமும் தான் கல்வி கற்றுள்ளதைப் பற்றியும் தனக்கு அறிவு முன்பு இருந்ததைவிடக் கற்றபிறகு மிகுதியாக இருத்தலைப் பற்றியும் தன்னைத்தானே மிகுதியாகப் புகழ்ந்து பேசிக்கொண்டான். தன்னாற் புராணச் சொற்பொழிவுகள் செய்ய முடியுமென்றுங் கேட்பதற்குத் தக்க மனிதர்கள் அவ்வூரில் இல்லையென்றும் தான் புராணச் சொற்பொழிவு செய்தால் கேட்பவர்கள் ஒன்றும் விளங்காமல் விழிப்பார்கள் என்றும் தன்னுடைய மனம் போனவாறு பேசினான். மழவராயன் கூறியதைக் கேட்ட மற்றவர்கள் மழவராயன் ஏதோ சிறிதேனும் கல்வி கற்றிருக்கிறான் என்று எண்ணிக் கொண்டிருந்தோமே பெரிய முட்டாளாகவன்றோ இருக்கின்றான் என்று எள்ளி நகையாடினார்கள். புகழ்ச்சியை விரும்பிய மழவராயனுக்கு ஏற்பட்டது இகழ்ச்சிதான்.