நெருப்பு

தரம் 6 பாடம் 16:1.1

 

நெருப்பு 


நெருப்பு, நெருப்பு என்று கூறிக்கொண்டு ஒதுங்கும் உங்களுக்கு நான் கூறும் புத்திமதிகளைக் கேளுங்கள். எனது செயற்பாடு இன்றி இவ்வுலகில் எதுவுமே நிகழ்ந்துவிடாது. விஞ்ஞான உலகில் வாழ்கின்றோம் எனக் கூறுகின்றீர்களே, இவ் விஞ்ஞான வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைந்திருப்பது நான் என்பது உங்களுக்குத் தெரியுமா? ருசியான உணவு உண்ண ஆசைப்படும் உங்களுக்கு உணவினை இதமாக ஆக்கித் தருவது யார்? உங்களுக்கு உற்ற தோழன் நானென்பதை இப்பொழுது நீங்கள் ஒத்துக் கொள்ளுவீர்களென நினைக்கிறேன்.

ஆனால் என்னிலும் சில கெட்ட குணங்கள் உண்டு. இலகுவில் தீப்பற்றக்கூடிய பொருட்களைக் கண்டால் உடனே அதில் பாய்ந்து அதனை எரித்துச் சாம்பலாக்கி விடுவேன். அது எனது இயல்பு எனக்கு மகிழ்ச்சி, எனவேதான் எனது பயன்பாடு, செயற்பாட்டில் நீங்கள் அவதானமாக இருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆம் கல்லில் கல்லைத் தேய்த்தும், மரத்தைத் தேய்த்தும் ஆதிகால மனிதன் என்னை உருவாக்கினான். ஆனால் இப்போது என்ன நிகழ்கிறது?

இராசாயனக் கலவைகளின் செயற்பாட்டால் என்னை இலகுவில் பெற்று விடுகிறீர்கள். உங்கள் அனைவருக்கும் நான் உதவி செய்யக் காத்திருக்கிறேன். உயிர், உடமைகளை அழிக்கும் கெட்ட குணமும் எனக்கு உண்டு. எனவே என்னை நீங்கள் அவதானமாகக் கையாளுங்கள். அது உங்களுக்கும் எனக்கும் நன்மையையே பயக்கும். நான் எரிவதனால் உண்டாவது புகை, சாம்பல். நெருப்பு இல்லாமல் புகை வருமா? என பழமொழியும் கூறுவார்கள்.