ஒழுக்கம் உயர்வளிக்கும்
தரம் 6 பாடம் 17:1.1
ஒழுக்கம் உயர்வளிக்கும்
அதிபர் அவர்களுக்கும் ஆசிரியப் பெருந்தகைகளுக்கும் அன்பான மாணவர்களுக்கும் காலை வணக்கம். நான் உங்கள் முன் ஒழுக்கம் உயர்வளிக்கும் என்ற தலைப்பில் உரையாற்றப் போகின்றேன்.
மாணவர்களாகிய நாங்கள் நல்லொழுக்கங்களை பின்பற்றி சிறந்து விளங்க வேண்டும். அன்றேல் எங்களுக்கு பெருமையிராது.
“ஒழுக்கம் விழுப்பந் தரும்” என்பது வள்ளுவர் வாக்கு. மரம் கனி தரும், மாடு பால் தரும் என்பது போல ஒழுக்கம் விழுப்பந் தரும் என்று குறள் கூறுகின்றது. விழுப்பம் என்பது சிறப்பு, நாம் சிறப்படைய வேண்டுமானால் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தாக வேண்டும் என்பது இதனால் புலப்படும் .
ஒழுக்கத்தின் எய்துவார் மேன்மை என்பது வள்ளுவர் கருத்து. இது படிப்பால், பட்டத்தால், பதவியால், பணத்தால் ஒருவன் மேன்மை அடைய முடியாது. ஒழுக்கம் ஒன்றினால் தான் மேன்மையடைய முடியும். என்பதை வலியுறுத்துகின்றது. ஆம் ஒழுக்கத்தை இழந்தவர்கள் எவ்வளவு படித்தாலும், எத்தகைய பட்டம் பெற்றாலும், எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், எவ்வளவு பணம் பெற்றிருந்தாலும் என்ன பயன்?
உயிரைக் காப்பாற்றுவதில் நாம் அனைவரும் அதிக கவனம் எடுத்துக் கொண்டிருக்கின்றோம். அதைவிட ஒழுக்கத்தைக் காப்பாற்றுவதில் அதிகமாகக் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது வள்ளுவர் கருத்து, இதை அவர், “ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்” என்று அரைக் குறளால் கூறுகின்றார்.
ஒழுக்கத்தை இழந்தவர்கள் எவராலும் மதிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் இகழப்படுவார்கள். அது மட்டுமல்ல, அவர்கள் அடைய வேண்டாத பழியையும் அடைய வேண்டி நேரிட்டுவிடும் என்று வள்ளுவர் எச்சரிக்கை செய்கின்றார். இழுக்கத்தின் எய்துவர்பழி என்று கூறவில்லை. “இழுக்கத்தின் எய்துவர் எய்தாப்பழி" என்பதே அவர் வாக்கு இதனால் ஒழுக்கம் தவறியவன் தான் செய்யாது, பிறர் செய்த பழியையும் ஏற்க வேண்டிவரும் எனத் தெரிய வருகிறது.
பைபிளில் பத்துக்கட்டளைகள் இருப்பது போல திருக்குறளில் பத்துக் கட்டளைகள் இருக்கின்றன. இவை பத்தும் ஒழுக்கத்தை பெறத் துணை செய்வன. அவை
பொய்யைச் சொல்லாதே, புலாலை உண்ணாதே
கள்ளைக் குடியாதே, களவை நினையாதே
காமம் கொள்ளாதே, கொலையைச் செய்யாதே
சூதை விரும்பாதே, சிற்றினம் சேராதே
புறங் கூறாதே, பொறாமையடையாதே
இவை பத்தையும் வெவ்வேறு சொற்களால் கூறியிருப்பது எண்ணி எண்ணி வியக்கக்கூடிய ஒன்று. மாணவர்களாகிய நாங்கள் இவற்றைப் பின்பற்றி நடந்தால் மக்கட் சமூகத்தில் நாங்கள் உயர்ந்து காணப்படுவோம். ஆகவே ஒழுக்கம் உயர்வளிக்கும் என்பதைக் கேட்டு மனதில் வைத்து நடந்தீர்களானால் நீங்களும் உயர்வடைவீர்கள் என நம்புகின்றேன். எனக் கூறி உரையை அமைதியாகக் கேட்ட அனைவருக்கும் அன்பின் பணிவு.
நன்றி வணக்கம்.