பென்சில்

தரம் 3 பாடம் 11.1

 

பென்சில்

நான் இப்போது, கவனிப்பாரின்றி குப்பைத் தொட்டியில் கிடக்கும் பென்சில் பேசுகிறேன். என் கடந்த கால நிலை மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நான் பெரிய தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டேன். பிறகு ஒரு கடையில் விற்பனைக்குக் கொண்டு சென்றார்கள். என்னோடு சேர்த்து என்னைப் போல சக நண்பர்களையும்  நான் கண்டேன்.


நான் இருந்தக் கடைக்கு ஒரு சிறுமி தன் அப்பாவுடன் வந்தாள். அங்கு அச்சிறுமி என்னைக் கண்டு விருப்பப்பட்டு என்னை வாங்குவதற்கு அடம்பிடித்தாள். தந்தை என்னை வாங்க மறுக்கக் கோபத்துடன் என்னைப் பார்த்துக் கொண்டே சென்றாள். சிறிது சிறிதாகப் பணம் சேர்த்து என்னை வாங்குவதற்கு அவள் ஆவலுடன் வந்தாள்.
பின்பு என்னை வாங்கிக் கொண்டு அவளது புத்தகப்பைக்குள்     வைத்துப்     பாடசாலைக்குக் கொண்டு சென்றாள்.     அங்கு சக நண்பர்களிடமும்     என்னைக் காட்டி     மகிழ்ந்தாள். என் தலையைச் சீவி அவளது பயிற்சிப் புத்தகத்தில் எழுத ஆரம்பித்தாள். என்னில் இருந்து வரும் எழுத்துக்கள் முத்து முத்தாக வருவதாக அனைவருக்கும் காட்டி மகிழ்ந்தாள். இதனால் ஆசிரியர் அவளுடைய எழுத்தைப் பார்த்து மிகவும் அழகாக உள்ளது என்று பாராட்டிப்பரிசு கொடுத்தார்.


பின்பு அம் மாணவி எழுத்துப் போட்டி ஒன்றுக்குத் தெரிவாகி, என்னைக் கொண்டு எழுதி அப்போட்டியில் வெற்றி பெற்றாள். நான் வந்த பின்புதான் அவள் வெற்றி பெற்றாள் எனவும்  அவளுடைய வெற்றிக்குக் காரணம் நான் என்றும் அவள் என்னை அவளுடனே வைத்துக் கொண்டாள். எங்கு சென்றாலும் என்னை எடுத்துச் செல்ல மறப்பதில்லை. பின்பு அவள் பாவித்த பயிற்சிப் புத்தகங்களில் என்னைக் கொண்டு எழுதி எழுதியே பெரிதாக இருந்த என்னைச் சிறிதாக்கி விட்டாள். புதிதாக என்னைப் போல் இன்னொரு பென்சிலைப் பெற்றுக்கொண்டதும், ஓர் நாள் என்னைக் குப்பைத் தொட்டியில் வீசி விட்டாள்.