பெயர்ச்சொல்லையும் அதன் தன்மைகளையும் அறிந்து கொள்ளல்-1
பெயர்ச்சொல் சார்ந்த வினாக்களுக்கான விடைகளைச் சுருக்கமாக அணுகுதல்.
1.சொல் என்றால் என்ன?
ஓர் எழுத்தேனும், ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்களேனும் பொருள் தருமாயின் அது சொல் எனப்படும்.
2.சொற்களின் தன்மையின் அடிப்படையில் அவற்றை எத்தனை வகையாக வகைப்படுத்தலாம்? அவை எவை?
நான்கு வகையாக வகைப்படுத்தலாம்.
அவையாவன:
பெயர்ச் சொல் உ+ம்: கதிரை
வினைச் சொல் உ+ம்: நடந்தான்
இடைச் சொல் உ+ம்: இனி
உரிச் சொல் உ+ம்: சால
3.சொற்கள் தோற்றம் பெற்ற முறைமையின் அடிப்படையில் அவற்றை எத்தனை வகையாக வகைப்படுத்தலாம்? அவை எவை?
நான்கு வகையாக வகைப்படுத்தலாம்.
அவையாவன:
இயற்சொல் உ+ம்: மரம்
திரிசொல் உ+ம்: வாரணம்
திசைச்சொல் உ+ம்: ஜன்னல்
வடசொல் உ+ம்: கமலம்
4. பெயர்ச் சொல் என்றால் என்ன?
பெயர்ச்சொல் என்பது ஒன்றன் பெயரை உணர்த்தும் சொல் ஆகும். பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் பெயர்ச்சொற்கள் தோன்றும்.
உ+ம்: : மனிதன், மரம், வீடு
5. பொருளினடிப்படையில் பெயர்ச் சொற்களை எத்தனை வகைப்படுத்தலாம்? அவை எவை?
ஆறு வகைப்படுத்தலாம்.
அவையாவன,
பொருட் பெயர் உ+ம்: மனிதன், கதிரை, மரம்
இடப் பெயர் உ+ம்: இலங்கை , இந்தியா
காலப் பெயர் உ+ம்: நாள், மாரி, கோடை
சினைப் பெயர் உ+ம்: கண், இலை, வால்
குணப் பெயர் உ+ம்: வட்டம், அன்பு, கருமை
தொழிற்பெயர் உ+ம்: ஆடுதல், நடத்தல், படித்தல்
6.பொதுவில் பெயர்ச் சொல் எத்தனை வகைப்படும்? அவை எவை?
மூன்று வகைப்படும்.
அவையாவன:
காரணப் பெயர்
இடுகுறிப் பெயர்
காரண இடுகுறிப் பெயர்
7.காரணப் பெயர் என்றால் என்ன?
யாதேனும் ஒரு காரணம் பற்றி வழங்கி வரும் பெயர் காரணப் பெயர் எனப்படும்.
உ+ம்: அணி, பறவை, பொன்னன்
8.காரணப் பெயர் எத்தனை வகைப்படும்? அவை எவை?
இரண்டு வகைப்படும்.
அவையாவன:
காரணப் பொதுப் பெயர் உ+ம்: அணி
காரணச் சிறப்புப் பெயர் உ+ம்: கழல்
9.காரணப் பொதுப் பெயர் என்றால் என்ன?
காரணம் கருதிப் பொதுவாக வழங்கப்படும் பெயர் காரணப் பொதுப் பெயர் எனப்படும்.
உ+ம்:
அணி - இங்கே அணி என்பது அணியப்படுதலாகிய காரணம் பற்றி வழங்கும் பெயராய் இடுவன, தொடுவன, கட்டுவன, கவிப்பன முதலிய பல ஆபரணங்களுக்குப் பொதுவாய் நிற்பதால் காரணப் பொதுப் பெயரானது.
10.காரணச் சிறப்புப் பெயர் என்றால் என்ன?
காரணம் கருதி சிறப்பாக வழங்கப்படும் பெயர் காரணச் சிறப்புப் பெயர் எனப்படும்.
உ+ம்:
முடி, கழல் - இங்கே முடி என்பது முடியிற் கவிழ்க்கப்படும் காரணம் பற்றி வழங்கும் பெயராய் சிறப்பாய் நின்றும் கழல் என்பது காலில் கட்டப்படும் காரணம் பற்றி வழங்கும் பெயராய் சிறப்பாய் நின்றும் பொருள் தருவதால் இவை காரணச் சிறப்புப் பெயராகின.