பெயர்ச்சொல்லையும் அதன் தன்மைகளையும் அறிந்து கொள்ளல்-2
பெயர்ச்சொல் சார்ந்த கேள்விகளுக்கான விடைகளைச் சுருக்கமாகத் தருதல்.
1.இடுகுறிப் பெயர் எத்தனை வகைப்படும்? அவை எவை?
இரண்டு வகைப்படும்.
அவையாவன:-
இடுகுறிப் பொதுப் பெயர் உ+ம்: மரம்
இடுகுறிச் சிறப்புப் பெயர் உ+ம்: மாமரம்
2.இடுகுறிப் பொதுப் பெயராவது எது?
காரணம் கருதாது பொதுவாக வழங்கப்படும் பெயர் இடுகுறிப் பொதுப் பெயர் எனப்படும்.
உ +ம்:
மாமரம் - இங்கே மா என்பது ஒரு காரணமும் பற்றாது வழங்கும் பெயராய் ஒரு பொருளுக்கே (மாமரம்) சிறப்பாய் நிற்பதால் இது இடுகுறிப் பொதுப்பெயரானது.
3.காரண இடுகுறிப்பெயர் என்றால் என்ன?
காரணம் கருதிய பொழுது அக்காரணங்களையுடைய பல பொருள்களுக்குச் செல்வதாயும், காரணங் கருதாத பொழுது இடுகுறியாய் நின்று ஒவ்வொரு பொருளுக்கும் செல்வதாயும் உள்ள பெயர் காரண இடுகுறிப் பெயர் எனப்படும்.
உ+ம்:
முக்கணன் - இங்கே முக்கணன் என்பது காரணங் கருதிய பொழுது விநாயகக் கடவுள் முதலிய பலரையுங் குறிப்பதாயும், காரணங் கருதாத பொழுது இடுகுறியாய் சிவபெருமானைக் குறிப்பதாயும் இருப்பதால் இது காரண இடுகுறிப்பெயரானது.
4.காரண இடுகுறிப் பெயர்கள் சில தருக.
அந்தணன், முள்ளி ,கறங்கு, நாற்காலி
5.சிறப்புப் பெயர்கள் என்றால் என்ன?
விகுதி பெறாது இரு திணையிலும், ஆண், பெண்பால்களைக் குறித்து வரும் பெயர்கள் சிறப்புப் பெயர்கள் எனப்படும்.
உ +ம்:
திணை பால் சிறப்புப் பெயர்
உயர்திணை ஆண்பால் நம்பி, கோ, விடலை
உயர்திணை பெண்பால் மாது, நங்கை, தையல்
அஃறிணை ஆண்பால் சேவல், களிறு, கலை
அஃறிணை பெண்பால் பேடு, பிணை
6. பொதுப் பெயர்கள் என்றால் என்ன?
விகுதி பெறாது இருதிணையிலும் ஆண், பெண் பால்களுக்குப் பொதுவாக வரும் பெயர்கள் பொதுப் பெயர்கள் எனப்படும்.
உ+ம்: தாய், தந்தை , ஆண், பெண், தான், தாம்
7. இருதிணை மூவிடப் பொதுப் பெயர்கள் எவை?
எல்லாம், தாம், தான்
உ+ம்: நாமெல்லாம், நீரெல்லாம், அவரெல்லாம், அவையெல்லாம்,அவர்தாம், அவைதாம், அவன்தான், அதுதான்
8. உயர்திணை இருபாற் பொதுப்பெயர் என்றால் என்ன?
உயர்திணையில் ஆண், பெண் பால்களுக்குப் பொதுவாக வரும் பெயர் உயர்திணை இருபாற் பொதுப் பெயர் எனப்படும்,
உ+ம் : அதிபர், பேதை, ஊமை, நீதிபதி, ஏழை, அகதி
9.அஃறிணை இருபாற் பொதுப் பெயர் என்றால் என்ன?
அஃறிணையில் ஆண், பெண் பால்களுக்குப் பொதுவாக வரும் பெயர் அஃறிணை இருபாற் பொதுப் பெயர் எனப்படும்.
உ+ம்:
பறவை வந்தது, பறவை வந்தன
மரம் வளர்ந்தது, மரம் வளர்ந்தன
10. மூவிடப் பெயர்கள் எனப்படுபவை எவை?
தன்மைப் பெயர்
முன்னிலைப் பெயர்
படர்க்கைப் பெயர்
11.படர்க்கைப் பால்காட்டும் பெயர்கள் எவை?
ஆண்பாற் பெயர்
பெண்பாற் பெயர்
பலர்பாற் பெயர்
ஒன்றன்பாற் பெயர்
பலவின்பாற் பெயர்