வேற்றுமை விளக்கம், அதன் உருபுகள் மற்றும் பொருள்களின் விளக்கங்களை அறிதல்-02

வேற்றுமை சார்ந்த வினாக்களுக்கான விடைகளைச் சரியாக அணுகுதல்-02

1. மூன்றாம் வேற்றுமையின் உருபு, பொருள், சொல்லுருபுகளைத் தருக. 

இவ்வேற்றுமையின் உருபு ஆல், ஆன், ஒடு, ஓடு என்பனவாகும். 

பொருள்களாக கருவிப் பொருள், கருத்தாப் பொருள், உடனிகழ்ச்சிப் பொருள் என்பன உள்ளன. இக்கால வழக்கில் சொல்லுருபுகளாகக் கொண்டு, உடன் என்பனவும் வழக்கிலுள்ளன. 

உ+ம்:       

மரத்தால் விழுந்தான்.

நண்பனொடு கண்ணன் வந்தான்.

தந்தையோடு மகன் போனான். 

 

2.கருவிப் பொருள் எத்தனை வகைப்படும்? அவை எவை? 

ஐந்து வகைப்படும். அவையாவன: 

1) முதற்கருவி                  உ+ம்:     மண்ணாலாகிய குடம் 

2) துணைக்கருவி           உ+ம்     திரிகையாலாகிய குடம் 

3) அகக்கருவி                  உ+ம்:      மனத்தால் நினைத்தான் 

4) புறக்கருவி                   உ+ம்:     வாளால் வெட்டினான்

5) ஒற்றுமைக்கருவி      உ+ம்:    அறிவால் அறிந்தான் 

 

3. கருத்தாப் பொருள் எத்தனை வகைப்படும்? அவை எவை?

இரண்டு வகைப்படும். 

அவையாவன - 

1) இயற்றுதற் கருத்தா        உ+ம்:       தாசனால் கோயில் கட்டப்பட்டது. 

2) ஏவுதற் கருத்தா                உ+ம்:       அரசனால் கோயில்        கட்டுவிக்கப்பட்டது 

 

4.தலைமைப் பொருள் என்றால் என்ன? 

வாக்கியமொன்றின் வினை (சொல்) கொண்டு முடியும் பொருளின் உயர்வுடையது தலைமைப் பொருளாகும். 

உ+ம்:

மாணாக்கனோடு ஆசிரியன் வந்தான் - இங்கே வந்தான் எனும் வினை (யார் வந்தான்? எனும் போது) ஆசிரியன் எனும் பொருள் கொண்டு உயர்வுடையலாதலால் இது தலைமைப் பொருள் எனப்படுகிறது. (மாணாக்கனிலும் ஆசிரியர் சிறப்புடையவர்)

 

5. தலைமையில் பொருள் என்றால் என்ன?

வாக்கியமொன்றின் வினை (சொல்) கொண்டு முடியும் பொருளின் இழிவுடையது தலைமையில் பொருளாகும். 

உ+ம்:

மன்னனோடு மந்திரி வந்தான் - இங்கே வந்தான் எனும் வினை (யார் வந்தான்? எனும் போது) மந்திரி எனும் பொருள் கொண்டு இழிவுடையலாதலால் இது தலைமையில் பொருள் எனப்படுகிறது. (மன்னனிலும் மந்திரி இழிவுடையவன்)

 

6. மூன்றாம் வேற்றுமையின் சொல்லுருபுகள் எவை?

கொண்டு, உடன்.

உ+ம்: 

வாள் கொண்டு வெட்டினான். 

கொண்டு என்ற சொல்லுருபு கருவிப்பொருளுக்கு வந்துள்ளது..

 

நண்பனுடன் வந்தான். 

உடன் என்ற சொல்லுருபு உடனிகழ்ச்சிப் பொருளில் வந்துள்ளது.


7. நான்காம் வேற்றுமையின் உருபு, பொருள்கள் எவை?

உருபு கு ஆகும். இதன் பொருள் ஏழு வகைப்படும். 

அவையாவன: 

கோடற் பொருள்                                               உ+ம்: ஏழைக்குப் பணம் கொடுத்தான்.

பகைப் பொருள்                                                 உ+ம்: பாம்புக்குப் பகை கீரி. 

நட்புப் பொருள்                                                  உ+ம்: கண்ணனுக்கு நண்பன் குமார். 

தகுதிப் பொருள்                                                உ+ம்: அரசருக்கு உரியது மணிமுடி 

முதற் காரண காரியப் பொருள்                  உ+ம்: தாலிக்குப் பொன் உருக்கினான்.

நிமித்தக்காரண காரியப் பொருள்             உ+ம்:      கூலிக்கு வேலை செய்தான்.

முறைப் பொருள்                                               உ+ம்: தசரதனுக்கு மகன் இராமன்.

 

8.நான்காம் வேற்றுமையின் சொல்லுருபுகள் எவை?  

பொருட்டு     உ+ம்: கூலியின் பொருட்டு வேலை செய்தான். 

நிமித்தம்      உ+ம்: கூலியின் நிமித்தம் வேலை செய்தான். 

ஆக                உ+ம்: கூலிக்காக வேலை செய்தான்.



9. ஐந்தாம் வேற்றுமையின் உருபு, பொருள்கள் எவை?

உருபு இல், இன் என்பனவாகும். 

பொருள்களாவன: 

நீக்கலப் பொருள்      உ+ம்:  ஊரின் நீங்கினான். 

ஒப்புப் பொருள்         உ+ம்:  பாலில் வெள்ளை கொக்கு.

எல்லைப் பொருள்    உ+ம்:  இலங்கையின் வடக்கு இந்தியா. 

ஏதுப் பொருள்            உ+ம்:  கவியில் பெரியன் கம்பன்

 

மேலும் பாடங்கள்