வினைச்சொல்லை விரிவாக விளங்கிக்கொள்ளல்-01
வினைச்சொல் சார்ந்த வினாக்களுக்கான விடைகளைச் சுருக்கமாக அறிதல்-01

1.வினைச் சொல் என்றால் என்ன?
ஒரு செயலை அல்லது பொருளொன்றின் புடைப் பெயர்ச்சியை உணர்த்துஞ் சொல் வினைச் சொல் எனப்படும்.
2.வினைச் சொல்லின் சிறப்பியல்பு யாது?
காலத்தைக் காட்டும்.
3.வினைச் சொல்லை எத்தனை வகைப்படுத்தலாம்? அவை எவை?
இரண்டு வகைப்படுத்தலாம்.
அவையாவன:
முற்றுவினை
எச்சவினை
4.முற்றுவினை என்றால் என்ன?
ஒரு எழுவாயின் செயல் முற்றுப்பெற்று நிற்கும் வினை முற்றுவினை எனப்படும்.
உ+ம் கண்ணன் பாடம் படித்தான்.
5.முற்றுவினை எத்தனை வகைப்படும்? அவை எவை?
இரண்டு வகைப்படும். அவையாவன:
தெரிநிலை வினைமுற்று
குறிப்பு வினைமுற்று
6.தெரிநிலை வினைமுற்று என்றால் என்ன?
செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் எனும் அறுவகைப் பொருளையும் தந்து வெளிப்படையாகக் காலத்தைக் காட்டி நிற்கும் வினைமுற்று தெரிநிலை வினை முற்று எனப்படும்.
உ+ம் வனைந்தான். படித்தான்.
7. குறிப்பு வினைமுற்று என்றால் என்ன?
அறுவகைப் பொருளடியாகப் பிறந்து செய்பவனை மாத்திரம் விளக்கி குறிப்பாகக் காலத்தைக் காட்டிநிற்கும் வினைமுற்று குறிப்புவினைமுற்று எனப்படும்.
(உ+ம்) கரியன், நல்லன்.
8.எச்சவினை என்றால் என்ன?
ஒரு எழுவாயின் செயல் முற்றுப் பெறாது நிற்கும் வினை எச்சவினை எனப்படும்.
(உ+ம்) நடந்த, படித்த
9.எச்சவினை எத்தனை வகைப்படும்? அவை எவை?
இரண்டு வகைப்படும். அவையாவன
பெயரெச்சம்
வினையெச்சம்
10.பெயரெச்சம் என்றால் என்ன?
பால்காட்டும் முற்று, விகுதி பெறாத குறைச் சொல்லாய் அமைந்து, பெயர்ச் சொல்லை முடிக்குஞ் சொல்லைக் கொண்ட எச்சம் பெயரெச்சம் எனப்படும்.
(உ+ம்) படித்த கண்ணன்.