இடைச்சொற்களையும் அவற்றின் தன்மைகளையும் அறிந்து கொள்ளல்.
இடைச்சொல் சார்ந்த வினாக்களுக்கான விடைகளைச் சரியாகத் தருதல்.

1. இடைச்சொல் என்றால் என்ன?
பெயரையும், வினையையும் போல் தனித்து வராதுபெயரையும், வினையையும் சார்ந்து வரும் சொல் இடைச் சொல் எனப்படும்.
2.இடைச் சொற்களை எவ்வாறு பிரதானமாகப் பகுக்கலாம் என்பதனைத் தருக.
வேற்றுமை உருபுகள் - இரண்டு தொடக்கம் ஆறு வரையான வேற்றுமைகளின் உருபுகளும், சொல்லுருபுகளும் .
காலம் காட்டும் இடை நிலைகள் - த், ட், ற், இன், ன், ஆநின்று, கின்று, கிறு, ப், வ்,
திணை, பால், எண், இடம் (உணர்த்தும்) விகுதிகள் - அன், ஆன், அள், ஆள், து, வை
ஓசை நயம்மிக்க சாரியைகள் – அத்து, அற்று, இன், இற்று, உ
உவமையுருபுகள் - போல, புரைய, ஒப்ப, மான, கடுப்ப, நேர, நிகர, அன்ன
இசை நிறைகள் - ஏ, ஏ இவள், பேடியே
அசை நிலைகள் ( இடைச் சொற்கள் ) - மியா, மதி, மோ, ஈ, ஏ, ஓ, அற்று, கொல், மற்று, மா
3.இடைச் சொற்களை உணர்த்தும் பொருளுக்கேற்ப எவ்வாறு பகுக்கலாம்?
1 )கட்டுப் பொருள் தருவன - அ, இ, உ
2) வினாப் பொருள் தருவன - எ, யா, ஆ. ஓ. ஏ
3) காலப் பொருள், இடப்பொருள் தருவன - முன், பின்
4) கால எல்லைப் பொருள் தருவன - இனி
5) இடப்பன்மை, தொழிற்பயில்வுப் பொருள் தருவன - தொறும், தோறும்
6) பயனின்மைப் பொருள் தருவன - இனி
7) விகற்பப் பொருள் தருவன - ஆவது, ஆதல், ஆயினும் தான்
8) இரக்கப் பொருள் தருவன - ஐயோ, அந்தோ
9) வியப்புப் பொருள் தருவன - ஆ,ஓ, ஓகோ, அம்ம
10) அச்சப் பொருள் தருவன - கூகூ, ஐயோ
11) இகழ்ச்சிப் பொருள் தருவன - சி, சீச்சீ, சை
12) குறிப்புப் பொருள் தருவன - இது மூன்றுவகைப்படும்.
அ) ஒலிக்குறிப்புப் பொருள் - அம்மென, இம்மென,திடுதிடென, கடகடென
ஆ) அச்சக் குறிப்புப் பொருள் - திடுக்தென, துண்ணென, துணுக்கென
இ) விரைவுக் குறிப்புப் பொருள் - பொள்ளென ,பொருக்கென, கதுமென
13) எண்ணுப் பொருள் தருவன - ஏ, உம், என்று, என்றா
14) தெளிவுப் பொருள் தருவன - மன்ற
15) உயர்த்தற் பொருள் தருவன - ஆர்
4.ஏகார இடைச்சொல் எத்தனை பொருளைத் தரும்? அவை எவை?
ஆறு பொருளைத் தரும். அவையாவன:
1) பிரிநிலை உ+ம்: அவருள் இவனே நல்லவன்
2) வினா உ+ம்: நீயே சொன்னாய்?
3) எண் உ+ம்: நிலமே, நீரே, தீயே, வளியே
4) ஈற்றசை உ+ம்: என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே
5) தெளிவு உ+ம்: உண்டே மறுமை
6) இசைநிறை உ+ம்: ஏயே இவளொருத்தி பேடியே
5.ஓகார இடைச் சொல்லுணர்த்தும் பொருள்களைத் தருக.
1) ஒழியிசை உ+ம்: படிக்கவோ வந்தாய்
2) வினா உ+ம்: குற்றியோ? மானோ?
3) சிறப்பு உ+ம்: ஓ ஓ பெரியன்
4) எதிர்மறை உ+ம்: அவனோ கொண்டான்
5) தெரிநிலை உ+ம்: களிறோ அதுவுமன்று, பிடியோ அதுவுமன்று
6) கழிவு உ+ம்: ஓ ஓ தமக்கோர் உறுதி உணராரோ
7) அசைநிலை உ+ம்: காணிய வம்மினோ
8) பிரிநிலை உ+ம்: இவனோ சொன்னான்.
6. உம் இடைச் சொல்லுணர்த்தும் பொருள்களைத் தருக.
1) எதிர்மறை உ+ம்: மறப்பினு மொத்துக் கொளலாகும்.
2) சிறப்பு உ+ம்: குறவரும் அருளும் குன்றம் .
3) ஐயம் உ+ம் வென்றாலும் வெல்லலாம் .
4) எச்சம் உ+ம் சாத்தனும் வந்தான் .
5) முற்று உ+ம்: எல்லோரும் வந்தனர்.
6) எண் உ+ம்: இரவும் பகலும் .
7) தெரிநிலை உ+ம்: ஆணுமன்று பெண்ணுமன்று .
8) ஆக்கம் உ+ம் சோறுமாயிற்று.
7. தத்தம் பொருளுணர்த்தும் இடைச்சொற்கள் எவை?
ஏ, ஓ, உம், மற்று, என, என்று, முன், பின், கீழ், மேல்,தோறும், ஐயோ போன்றனவாகும்.
8. இடைச் சொற்களின் பயன்பாடுகள் எவை?
மொழிக்குச் சிக்கனத்தைக் கொடுக்கிறது.
உச்சரிப்புக்கு எளிமையைக் கொடுக்கிறது.
கருத்தில் நெளிவு, சுழிவுகளை ஏற்படுத்துகிறது.
சொற்களின் முதல், இடை, கடை எனும் மூவிடங்களிலும் இடம் பெற்று பொருட் பேற்றிற்குதவுகிறது.
எழுதும் நிகழ்வைத் தொடர்புபடுத்த உதவுகிறது.
9.உரிச்சொல் என்றால் என்ன?
பொருளுக்கு உரிமை பூண்டு நின்று உயிருள்ள, உயிரற்ற பொருள்களின் பண்பை உணர்த்துஞ்சொல் உரிச்சொல் எனப்படும்.
10.உரிச் சொல் எத்தனை வகைப்படும்? அவை எவை?
இரண்டு வகைப்படும். அவையாவன:
1) ஒரு குணந்தழுவிய உரிச்சொல் - சால, நனி, உறு, தவ, கழி, சுர்
2) பல குணந்தழுவிய உரிச்சொல் கடி - இது காப்பு, கூர்மை, விளக்கம், அச்சம், சிறப்பு, மிகுதி, புதுமை எனப்பல குணந்தழுவி வரும்.