தமிழ்ச் சொல் வகைகளை அறிந்து கொள்ளல்.
தரப்படும் வினாக்களின் விடையைச் சுருக்கி அறிதல்.
1.இயற்சொல் என்றால் என்ன?
கற்றோரும், கல்லாதோரும் இயல்பாகப் பொருளறியும் படி தம் பொருளை விளக்குந் தன்மையுடைய உலக வழக்கே இயற்சொல்லாகும்.
2. இயற்சொல்லை எத்தனை வகைப்படுத்தலாம்? அவை எவை?
நான்கு வகைப்படுத்தலாம்.
அவையாவன:
பெயரியற் சொல் உ+ம்: மண், பொன்
வினையியற் சொல் உ+ம்: நடந்தான், வந்தான்
இடையியற் சொல் உ+ம்: அவனை(ஐ), அவனால் (ஆல்)
உரியியற் சொல் உ+ம்: அழகு, அன்பு
3.திரிசொல் என்றால் என்ன?
ஒரு பொருளைக் கருதிய பல சொற்களாயும், பல பொருள்களைக் கருதிய ஒரு சொல்லாயும் அரிதாகக் கற்றோர் பொருள் அறியும் படியான சொற்கள் திரிசொல் எனப்படும்.
4.திரிசொல் எத்தனை வகைப்படும்? அவை எவை?
நான்கு வகைப்படும். அவையாவன:
பெயர்த் திரிசொல் உ+ம்: வாரணம், ஆழி
வினைத் திரிசொல் உ+ம்: படர்ந்தான்,வரைந்தான்
இடைத் திரிசொல் உ+ம்: சோறும், கொல்
உரித் திரிசொல் உ+ம்: சால, கடி
5.திசைச்சொல் என்றால் என்ன?
உலகிலுள்ள ஏனைய மொழிகளிலிருந்து தமிழில் வந்து கலந்துள்ள சொற்கள் திசைச் சொற்கள் எனப்படும்.
உ+ம்:
திசைச் சொல் அது உணர்த்தும் பொருள் மொழி நாடு
பெற்றம் பசு தென்பாண்டிநாடு
பாண்டிதல் எருது தெலுங்கு மொழி
சாவி திறப்பு போர்த்துக்கேயம்
பட்டாளம் படை பிரான்சு
குசினி சமையலறை பிரான்சு
சினிமா திரைப்படம் ஆங்கிலம்
பொலிஸ் பாதுகாவலர் ஆங்கிலம்
உலாந்தா நில அளவையாளர் ஒல்லாந்து
6.வடசொல் என்றால் என்ன?
ஆரியத்திற்கும், தமிழிற்கும் பொதுவான எழுத்தாலும், அல்லது ஆரியத்திற்கே உரிய சிறப்பெழுத்துத் திரிந்த எழுத்தாலும், அல்லது இவ்விரண்டு எழுத்துக்களாலும் ஆகித் தமிழ்ச் சொற்களை ஒத்தனவாகி வட திசையிலிருந்து தமிழில் வந்து வழங்கும் சொற்கள் வடசொல் எனப்படும்.
உ+ம்: மேரு, கமலம் (ஆரியம் + தமிழ் பொதுவான எழுத்து)
சுகி, போகி (ஆரியத்திற்குரிய சிறப்பெழுத்து)
சலம், கடினம் (இவ்விரு எழுத்துக்களும்)
7.வடசொல் எத்தனை வகைப்படும்? அவை எவை?
இரண்டு வகைப்படும். அவையாவன:
தற்சமம்
தற்பவம்
8. தற்சமம் என்றால் என்ன?
வடமொழிக்கும், தமிழ் மொழிக்கும் பொதுவான எழுத்துக்களாலான வட சொற்கள் தற்சமம் எனப்படும்.
உ+ம்: குங்குமம், அமலம்
9.தற்பவம் என்றால் என்ன?
தமிழிலே திரிபடைந்து வரும் ஆரிய மொழிக்குரிய சிறப்பெழுத்துக்களாலான வடசொற்கள் தற்பவம் எனப்படும்.
உ+ம்: அரசன், நாகரிகம்