தொகை நிலைத்தொடர்கள் சார்ந்து விரிவான விளக்கங்களை அறிதல்-01
தொகை நிலைத்தொடர்கள் தொடர்பான வினாக்களுக்குச் சரியான விடையை எழுதுதல்-01

1. தொகைநிலைத் தொடர் என்றால் என்ன?
பெயர்ச்சொல்லோடு வினைச்சொல்லும் அல்லது பெயர்ச்சொல்லும் இணைந்து வரும் தொடரில் இடையில் வேற்றுமை உறுப்புகளோ, வினை பண்பு, முதலியவற்றில் உருபுகளோடு மறைந்து வந்து இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்கள் ஒரு சொல் போல் நிற்குமானால் அதனை தொகைநிலை தொடர் என்று கூறுவர்.
2. சொல்லோடு சொல் தொடரும் தொடர்ச்சி எவ்வாறு அழைக்கப்படும்?
தொடர் மொழி என அழைக்கப்படும்.
3. சொல்லோடு சொல் தொடரும் தொடர்ச்சி எத்தனை வகைப்படும்? அவை எவை? .
இரண்டு வகைப்படும்.
அவையாவன –
1) தொகைநிலைத் தொடர்மொழி
2) தொகாநிலைத் தொடர்மொழி
4. தொகைநிலைத் தொடர்மொழி என்றால் என்ன?
சொற்கள் ஒன்றோடொன்று தொடர்ந்து வரும் போது வேற்றுமை உருபுகள் நடுவிலே தொக்கு நிற்க, பல சொற்கள் தொடர்ந்து ஒரு சொல் போல் வரும் தொடர்மொழி தொகைநிலைத் தொடர்மொழி எனப்படும்.
5.தொகைநிலைத் தொடர்மொழி எத்தனை வகைப்படும்? அவை எவை?
ஆறு வகைப்படும்.
அவையாவன: -
வேற்றுமைத் தொகை
வினைத் தொகை
பண்புத் தொகை
உவமைத் தொகை
உம்மைத் தொகை
அன்மொழித் தொகை
6.வேற்றுமைத் தொகை என்றால் என்ன?
ஐ தொடக்கமுள்ள ஆறு வேற்றுமை உருபுகளும் தொக்கி வரும் தொடர்மொழிகள் வேற்றுமைத் தொகை எனப்படும்.
புத்தகம் படித்தான் - புத்தகத்தைப் படித்தான்
(இரண்டாம் வேற்றுமைத் தொகை)
தலை வணங்கினான் - தலையால் வணங்கினான்
(மூன்றாம் வேற்றுமைத் தொகை)
கமலன் மகன் - கமலனுக்கு மகன்
(நான்காம் வேற்றுமைத் தொகை)
ஊர் நீங்கினான் - ஊரின் நீங்கினான்
(ஐந்தாம் வேற்றுமைத் தொகை)
விமலன் கை -விமலனது கை
(ஆறாம் வேற்றுமைத் தொகை)
மலை வீழருவி - மலையின் கண் வீழருவி
(ஏழாம் வேற்றுமைத் தொகை)
7. வினைத் தொகை என்றால் என்ன?
காலங்காட்டும் இடைநிலைகளும், விகுதிகளும் தொக்கி வரும் தொடர் மொழிகள் வினைத் தொகை எனப்படும்.
உ+ம் :
நேற்று கொல்களிறு - இறந்தகால வினைத் தொகை
இன்று கொல்களிறு - நிகழ்கால வினைத் தொகை
நாளை கொல்களிறு - எதிர்கால வினைத் தொகை
கொல் என்பது விரியும் போது கொன்ற, கொல்கின்ற, கொல்லும் என வரும்.
8.பண்புத் தொகை என்றால் என்ன?
பண்புப் பெயருக்கும் அது தழுவி நிற்கும் பெயர்ச்சொல்லுக்கும் இடையே ஆன,ஆகிய என்னும் பண்புருபுகள் மறைந்து வருவது பண்புத் தொகை எனப்படும்.
உ+ம் : வெண்ணிலவு, கருங்குவளை - வெண்மை,கருமை என்னும் பண்புப் பெயர் நிலவு,குவளை என்னும் பெயர்ச்சொல்லைத் தழுவி நிற்கின்றது. ஆன,ஆகிய என்னும் உருபுகள் மறைந்து வெண்மையான நிலவு, கருமையாகிய குவளை என்னும் பொருள்களைத் தரும்.
9.பண்புத் தொகையை எத்தனை வகைப்படுத்தலாம்? அவை எவை?
ஐந்து வகைப்படுத்தலாம். அவையாவன:
வண்ணப் பண்புத் தொகை உ+ம்: செந்தாமரை
வடிவப் பண்புத்தொகை உ+ம் வட்டப்பொட்டு
அளவுப் பண்புத்தொகை உ+ம் முக்குணம்
சுவைப் பண்புத்தொகை உ+ம் இன்சொல்
இருபெயரொட்டுப் பண்புத்தொகை உ+ம்: சாரைப்பாம்பு
10.இருபெயரொட்டுப் பண்புத் தொகை என்றால் என்ன?
ஆகிய எனும் பண்புருபு கெட்டு நிற்க, பொதுப்பெயரோடு சிறப்புப் பெயராயினும், சிறப்புப் பெயரோடு பொதுப் பெயராயினும் ஒரு பொருள் மேற்றொடர்ந்து வருவது இருபெயரொட்டுப் பண்புத் தொகையாகும்.
உ+ம். சாரைப்பாம்பு
11. உவமைத் தொகை என்றால் என்ன?
உவமை உருபுகள் தொக்கி வரும் தொடர்மொழிகள் உவமைத் தொகை எனப்படும்.
உ+ம்: துடியிடை (துடிபோலும் இடை என விரியும்)
உவமையுருபுகள் சில வருமாறு: போல, புரைய, ஒப்ப, உறழ, மான, மருப்ப, நேர, நிகர, அன்ன, இன்ன போன்றன அனைத்தும் உவமை உருபுகளே.
12. உம்மைத் தொகை என்றால் என்ன?
அளவைப் பெயர்களால் பொருள்களை அளக்கும் போது அவ்வளவைப் பெயர்களுள் "உம்" மையாகிய உருபு தொக்கி நிற்கும் தொடர்மொழி உம்மைத் தொகையாகும்.
உ+ம்.
கபீல பரணர் (கபிலரும் பரணரும் என வரும்)
சாணங்குலம் (சானும் அங்குலமும் என வரும்)
13.தொகாநிலைத் தொடர்மொழி என்றால் என்ன?
சொற்கள் ஒன்றோடொன்று தொடர்ந்து வரும் போது வேற்றுமை உருபுகள் நடுவிலே தொகாது நிற்க, சொற்கள் தொடர்ந்து ஒரு சொல் போல் வரும் தொடர்மொழி தொகா நிலைத் தொடர்மொழி எனப்படும்.